கோலாலம்பூர், நவ.16-
வெள்ளம் ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள பொதுமக்கள் முழு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பாதுகாப்புச் சமூக ஆர்வலர், பாலசுப்ரமணியம் கிருஷ்ணன் வலியுறுத்தினார்.
தற்போதைய மழைக் காலத்தில் தொடர்ச்சியாக கனமழை பெய்து ஆறுகளில் நீர் வழிந்தோடும். இதில் தங்களின் இருப்பிட நிலை குறித்து எந்நேரமும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
உங்களின் இருப்பிடம் தொடர்பில் நன்கு அறிந்து அதனுடன் வாழப் பழகிக் கொள்ளுங்கள். கனமழை காரணத்தால் அருகிலுள்ள ஆற்றுப் பகுதிகளில் நீர் வழிந்தோடலாம். இதில் வசிப்பிடம் வெள்ளத்தால் பாதிக்கப்படும் சூழ்நிலை அல்லது பாதுகாப்பற்றச் சூழ்நிலை ஏற்படுவதைக் கண்காணிக்க வீடமைப்புப் பகுதியில் ஒரு குழுவை ஏற்படுத்த வேண்டும். வானிலை மற்றும் வெள்ளம் ஏற்படுவது குறித்தப் புத்தம் புதிய செய்திகளைத் தொடர்ந்து குறித்துக் கொள்ள வேண்டும்.
கனமழை தொடர்ச்சியாகப் பெய்தால் இடமாற்றம் செய்துக் கொள்வதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும். உங்கள் இருப்பிடத்திற்கு அருகில் எங்கு உயரமானப் பகுதிகள் இருக்கின்றன என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று ‘வெள்ளத்திற்கான உதவிகள் மற்றும் மழைக் காலத்தை எதிர்கொள்வதற்கான முன்நடவடிக்கைகள்’ என்ற தலைப்பில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு அளித்தப் பேட்டியில் பாலசுப்ரமணியம் கிருஷ்ணன் குறிப்பிட்டார்.
-அஸ்ட்ரோ அவானி




