கோலாலம்பூர், நவ.15-
இங்குள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் ஏற்பாட்டில் பத்துமலை திருத்தல ஸ்ரீ மகா துர்க்கை அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் வரும் 19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெகு விமரிசையாக நடைபெறும்.
இந்த மகா கும்பாபிஷேகத்தையொட்டி காலை மணி 6.00க்கு ஆறாம் கால யாக பூஜை,மகா யாக நிறைவு, யாத்ரா தானம் முதலியவற்றைத் தொடர்ந்து காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் பத்துமலை திருத்தல ஸ்ரீ மகா துர்க்கை அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெறும் என்று கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர்.நடராஜா தெரிவித்தார்.
நண்பகல் 12.00 மணிக்கு மகேஸ்வர பூஜையைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும். இரவு 7.00 மணிக்கு ஸ்ரீ மகா துர்க்கை அம்மன் திருவீதி உலா வருதல் நடைபெறும்.
இந்த ஸ்ரீ மகா துர்க்கை அம்மன் கோவில் விமான திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மற்றும் மூலாய மகா கும்பாபிஷேகத்தில் பக்தர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு துர்க்கை அம்மன் அருள் பெற்றுய்யுமாறு டான்ஸ்ரீ நடராஜா கேட்டுக் கொண்டார்.
