கோலாலம்பூர், டிச.23-
கிறிஸ்துமஸ் குதூகலம் சிறார்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில் சத்து கேமா சமூக சங்கம் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது.
தலைநகர் , செராஸ், எம்பர் வர்த்தக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறார்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
புதிய தவணையில் இவர்கள் பள்ளி செல்வதற்கு வசதியாக புத்தகப் பைகள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இவர்களுக்கு மேலும் உற்சாகமூட்டும் வகையில் உணவு பற்றுச் சீட்டுகள் வழங்கப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான இச்சங்கத்தின் தலைவர் ஜோனாதன் வேலா சொன்னார்.
9ஆவது ஆண்டாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை தாங்கள் நடத்தி வருவதாகவும் இம்முறை 50 சிறார்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றதாகவும் ஜோனாதன் விவரித்தார்.
“கடந்த காலங்களில் அதிகமான எண்ணிக்கையில் சிறார்கள் கலந்து கொண்டனர். இம்முறை இவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் கொண்டாட்டத்தின் குதூகலம் குறையவில்லை” என்று இந்நிகழ்ச்சினூடே நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
நாட்டில் கொண்டாடப்படும் ஒவ்வொரு பண்டிகையும் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் வளர்க்கும். அவ்வகையில் இந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் அனைவரிடத்திலும் ஒற்றுமை உணர்வை வலுப்படுத்தும் என்று ஜோனாதன் நம்பிக்கை தெரிவித்தார்.




