கோலாலம்பூர், செப்.28 –

கோலாலம்பூர், டத்தோ கிராமாட்டில் உள்ள டாரூல் கூரான் இத்திபாஃக்கியா இஸ்லாமிய சமயப்பள்ளிக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் 16 வயதுடைய இரண்டு இளைஞர்கள் மீது மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

செப்டம்பர் 14 ஆம் தேதி  நடந்த அந்த தீ விபத்தில் 23 பேர் பலியாகினர். மஜிஸ்திரேட் சித்தி ரட்சியா , குற்றச்சாட்டை வாசித்தப் பின்னர் அதனைப் புரிந்து கொள்ள முடிவதாக அந்த இரண்டு குற்றவாளிகளும் தலையை அசைத்தனர்.

இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதால் அவ்விருவரிடமும் எந்த ஒரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை, அந்த இரண்டு குற்றவாளிகளையும் பிரதிநிதித்து எந்த ஒரு வழக்கறிஞரும் ஆஜராகவில்லை.

குற்றவியல் சட்டத்தின் 302 ஆவது பிரிவின் கீழ் அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் கட்டாய மரண தண்டனை வழங்க சட்டம் வகை செய்கிறது.

அந்த இரண்டு குற்றவாளிகளும் பதின்ம வயதுடையவர்கள் என்பதால் அவர்கள் மீதான குற்றச்சாட்டு வாசிக்கப்படும்போது அவர்கள் குடும்பத்தினர்,  பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் அறையில் இருந்து வெளியேறும்படி பணிக்கப்பட்டனர்.