கோலாலம்பூர், பிப்.3-
ஆசியாவின் மிகப்பெரிய தமிழ்ப் புத்தகாலயமாகத் திகழும் ஜெயபக்தி நிறுவனம் தமிழ்நாட்டு அரசாங்கத்தினால் “தமிழ் இலக்கிய மரபு காவலர் விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உலக வர்த்தக மையத்தில் ஜனவரி 16ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை நடைபெற்ற சர்வதேச புத்தகக் கண்காட்சியில் ‘தமிழ் இலக்கிய மரபுக் காவலர்’ என்ற கௌரவ விருது தமிழகத்தின் கல்வித்துறை மற்றும் பொது நூலக அமைப்பின் சார்பாக ஜெயபக்தி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாக அதன் உரிமையாளர் டத்தோ டாக்டர் கு.செல்வராஜ் தெரிவித்தார்.
இதன் வழி தமிழ்நாட்டிற்கு வெளியே சிறந்த தமிழ்ப் பதிப்பாளர் விருது வழங்கப்பட்ட நிறுவனம் என்ற பெயரை ஜெயபக்தி நிறுவனம் தட்டிச் சென்றிருப்பதாக இந்த விருது தொடர்பில் இங்குள்ள விஸ்மா ஜெயபக்தியில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார்.

மலேசிய திருநாட்டில் தமிழ் இலக்கியத்தைப் பாதுகாப்பதிலும் ஊக்குவிப்பதிலும் முக்கிய பங்கு வகித்து, இலக்கியத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய குயில் ஜெயபக்தி நிறுவனத்திற்கு தமிழ் இலக்கிய மரபுக் காவலரின் விருது வழங்கப்பட்டிருப்பது இந்நிறுவனத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகும் என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
மலேசியாவில் கடந்த 46 ஆண்டுகளாக பதிப்பக துறையில் பீடு நடை போட்டு வரும் ஜெயபக்தி நிறுவனம் கடந்த 31 ஆண்டுகளாக குயில் இதழை வெற்றிகரமாக வெளியிட்டு வரும் வேளையில் தமிழ்மொழி வளர்ச்சிக்காக குயில் விழா, நாடு தழுவிய நிலையிலான புத்தகக் கண்காட்சி, யூபிஎஸ்ஆர் கேள்வி பதில் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்நிறுவனத்தின் இத்தகுஅளப்பரிய சேவையை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விருதை தமிழ்நாடு அரசின் பொது நூலக இயக்குனர் மற்றும் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கே. இளம்பவத் ஐ.ஏ.எஸ். டத்தோ.செல்வராஜ்ஜிடம் வழங்கினார்.
இந்த விருது வழங்கப்படுவதற்கு முன்பு தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சியில் ஜெயபக்தி கொண்டிருக்கும் அர்ப்பணிப்பு மீது இரு முறை ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக அவர் சொன்னார்.
இந்த விருது தங்களுக்குத் தனி உத்வேகத்தை ஏற்படுத்தியிருப்பதோடு தமிழ் மொழி சேவையை மேம்படுத்துவதற்கான வாய்ப்பையையும் ஏற்படுத்தியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.




