spot_img
9.6 C
London
spot_img
Home சமூகம் நாட்டின் வளர்ச்சிக்கு இந்திய முஸ்லிம் சமுகத்தினரின் பங்களிப்பு அளப்பரியது! டத்தோ அப்துல் ரஹ்மான் புகழாரம்

நாட்டின் வளர்ச்சிக்கு இந்திய முஸ்லிம் சமுகத்தினரின் பங்களிப்பு அளப்பரியது! டத்தோ அப்துல் ரஹ்மான் புகழாரம்

0
331

கோலாலம்பூர், பிப்.5-

இந்திய முஸ்லிம் சமூகத்தினர் நாட்டிற்கும் அதன் மேம்பாட்டிற்கும் அளப்பரிய பங்காற்றி வருகின்றனர் என்று மனிதவள துறை துணையமைச்சர் டத்தோ அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

மிம்கோய்ன் எனப்படும் மலேசிய இந்திய முஸ்லிம் வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டிலான சிறு மற்றும் நடுத்தர வணிகர்களுக்கான விருது விழாவை துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ ஜாஹிட் ஹமிடியின் சார்பில் தொடக்கி வைத்து உரை நிகழ்த்துகையில் துணையமைச்சர் இவ்விதம் குறிப்பிட்டார்.

அவசர அலுவல் காரணமாக இந்த விழாவில் துணைப்பிரதமரால் கலந்து கொள்ள இயலாததால் தன்னைச் சென்று வரும்படி பணித்ததாக அவர் குறிப்பிட்டார்.
.

“மிம்கோய்னும் அதில் கலந்து கொள்ளும் வர்த்தகர்களும் நாட்டிற்கு மிகவும் முக்கியமானவர்கள் என்பதால் இந்த விருதளிப்பு விழாவிற்கு அவசியம் செல்லும்படி துணைப்பிரதமர் என்னைக் கேட்டுக் கொண்டார்” என்றார் அப்துல் ரஹ்மான்.

“அதே வேளையில், அவர்களை நாம் ஒருபோதும் புறக்கணிக்கக் கூடாது என்றும் அவர் என்னிடம் வலியுறுத்தினார் ” என்றார்..

கடந்த காலங்களில் நடைபெற்ற இந்த சம்மேளனத்தின் விருதளிப்பு விழாவில் துணைப் பிரதமர் வருகை புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

பல்வேறு துறைகளில் புரிந்த சாதனைக்காக விருது பெறும் வர்த்தகர்களுக்கு துணையமைச்சர் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

இந்திய முஸ்லிம் சமூகம் நாட்டின் மேம்பாட்டிற்காக தொடர்ந்து தங்களின் பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

நாட்டின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த அரசாங்கத்திற்கும் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் தலைமைத்துவத்திற்கும் பிளவுபடாத ஆதரவை வழங்கும்படியும் மிம்கோய்ன் உறுப்பினர்களை அப்துல் ரஹ்மான் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே, மிம்கோய்ன் நடத்திய வர்த்தக விருது விழாவுக்கான நீதிபதிகள் குழுவில் டத்தோ டாக்டர் ஏ.டி.குமார ராஜா மற்றும் இவ்விழாவின் அதிகாரப்பூர்வ ஊடகமான ‘நம்பிக்கை’ குழுமத்தின் தலைமை மேலாளர் தயாளன் சண்முகம் ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர். அவர்களுக்கு இவ்விழாவில் நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.