கோலாலம்பூர், ஏப்.24-
மலேசிய மாந்த நேய திராவிடர் கழகத்தின் ஏற்பாட்டில் தேசிய வகை பி.ஜே.எஸ்.1 தமிழ்ப்பள்ளியின் ஆதரவோடு புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் 134ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா எதிர்வரும் 05.05.2024 (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 1.30 மணிக்கு கழக தேசிய தலைவர் நாக.பஞ்சுவின் வரவேற்போடு கழகத்தின் மதியுரைஞர், ‘கொள்கைச்சுடர்’ ரெ.சு.முத்தையாவின் தலைமையில் தேசிய வகை பி.ஜே.எஸ்.1 தமிழ்ப்பள்ளியில் நடைபெற உள்ளதாக பெரியார் பெருந்தொண்டரும் மலேசிய மாந்தநேய திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளருமான அன்பரசன் சண்முகம் தெரிவித்தார்.
விழாவில் சிறப்பு அங்கமாக கழகத்தின் இளைஞர் அணி தலைவர் தோழர் த.நெ.நெடுஞ்சுடரின் தலைமையில் பட்டிமன்றம், ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கான கவிதைப்போட்டி, பேச்சுப்போட்டி, திருக்குறள் மனனப் போட்டி, பொது அறிவுப்புதிர் போட்டி, ஓவியம் தீட்டும் போட்டி என பல நிகழ்வுகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் தங்களின் பள்ளி ஆசிரியர்கள் அல்லது பெற்றோர்கள் உதவியுடன் விழா அன்று பிற்பகல் 1.30 மணிக்கு வந்து தங்களின் பெயரைப் பதிந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இவ்விழாவினை தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மதிப்புமிகு டத்தோ பா.சகாதேவன் உரையாற்றி அதிகாரப்பூர்வமாக விழாவைத் திறப்பு செய்யவுள்ளார்.
பி.ஜே.எஸ். 1 தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி.ரா.ராஜலட்சுமி சிறப்புரை ஆற்றவுள்ளார். விழாவிற்குச் சிறப்பு வருகை தரவிருக்கும் மாந்தநேய திராவிடர் கழகத்தின் காப்பாளர் தொழில்முனைவர் ரா.சந்துரு விழாவில் வெற்றி பெறும் மாணவர்களுக்குப் பரிசுகளை எடுத்து வழங்கவிருக்கிறார்.
இதன் அடிப்படையில் இலவசமாக நடைபெறும் இவ்விழாவை தமிழ் ஆர்வலர்கள், சுற்று வட்டார பொதுமக்கள், கழகத் தோழர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், இதனையே அழைப்பாக ஏற்று மறவாமல், தவறாமல் விழாவிற்கு வந்து கலந்து கொள்ள வேண்டுமென அழைக்கப்படுகின்றனர்.
இந்நிகழ்வு பற்றிய மேல் விவரங்களைத் தெரிந்து கொள்ள விரும்புவோர் 012-2679180, 0123965793, 0169870809, 0129424301, 0124341474 என்ற எண்களில் தொடர்பு கொள்ளும்படி அன்பரசன் கேட்டுக் கொண்டார்.





