கோல குபு பாரு, ஏப்.26-
அரசியல் தலைவர்களின் வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டு விட்டதைத் தொடர்ந்து வரும் மே மாதம் 11ஆம் தேதி தங்களின் ஆதரவு தேவைப்படும் வேட்பாளருக்கு கோல குபு பாரு சட்டமன்றத்தைச் சேர்ந்த 5 தோட்டப் பாட்டாளிகள் ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் இத்தோட்டத்தைச் சேர்ந்த பாட்டாளிகளிடமிருந்து வாக்குகளைப் பெற விரும்பினால் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவதாக அவர் சட்டப்பூர்வமாக அறிக்கை வழி தெரிவிக்க வேண்டும்.
இத்தோட்டத்தைச் சேர்ந்த மக்கள் பல முறை ஏமாற்றப்பட்டிருப்பதாகக் குடியிருப்பாளர் சங்கத் தலைவர் வாசுதேவன் ராஜமாணிக்கம் தெரிவித்தார்.
“அந்த வகையில் அரசியல் வெற்று வாக்குறுதிகளால் மீண்டும் ஏமாறுவதற்கு நாங்கள் விரும்பவில்லை. இத்தொகுதியில் 500க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இருக்கின்றனர்” என்றார்.
“எங்களின் வாக்குகள் வேண்டுமென்றால் நாங்கள் தயாரித்துள்ள அறிக்கையில் வேட்பாளர் கையொப்பமிட வேண்டும். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அதில் குறிப்பிடப்பட்ட வாக்குறுதிகளை அவர் நிறைவேற்ற வேண்டும்” என்று மலேசியா கினியிடம் அவர் விவரித்தார்.
-மலேசியா கினி





