உலு சிலாங்கூர், மே 12-
கோல குபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலில் பக்காத்தான் வேட்பாளர் பாங் சோக் தாவ் வெற்றி பெற்றது ஒற்றுமை அரசாங்கத்தின் தலைமைத்துவம் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையைப் புலப்படுத்துகிறது என்று சிலாங்கூர் மாநில பக்காத்தான் தலைவர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற மாநில தேர்தலில் வாக்களித்த 54 விழுக்காட்டினரைக் காட்டிலும் இந்தத் தேர்தலில் 57 விழுக்காட்டினர் வாக்களித்தது புள்ளி விவர அடிப்படையில் உயர்வைக் காட்டுகிறது.
“இதில் பெருமைப்படக்கூடிய இதர சில அடைவுநிலையை எடுத்துக் கொண்டால் அஞ்சல் வாக்குகளை நாம் வெற்றிகரமாகக் கைப்பற்றி விட்டோம்” என்றார்.
“அதே சமயம் கெர்லிங், சுங்கை ஆயர் ஜெர்னே, பெர்த்தாக் தொகுதிகளில் 3 வாக்குச் சாவடிகளையும் பக்காத்தான் வெற்றிகரமாகக் கைப்பற்றி விட்டது. இவற்றில் 2 தொகுதிகள் மலாய்க்காரர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டவையாகும் என்று செய்தியாளர்களிடம் பேசிய போது மாநில மந்திரி புசாருமான அமிருடின் ஷாரி குறிப்பிட்டார்.





