மாய ரேகை தொடர் இயக்குநர் & கதாபாத்திரங்களுடன் சந்திப்பு

73

கோலாலாம்பூர், மே 15-

மாய ரேகை தொடரின் இயக்குநர் மற்றும் கதாபாத்திரங்களுடன் நடத்தப்பட்ட நேர்காணலை இங்கு காண்போம்.

எஸ்.டி.புவனேந்திரன், இயக்குநர்:

மாய ரேகை தொடரை இயக்கியதற்கான உங்களின் உத்வேகம் என்ன?

நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான மோதல் – கதைக்களமே மாய ரேகை தொடரை இயக்கியதற்கான மிகப் பெரிய உத்வேகம். ‘அடெர்மடோகிளிஃபியாவைக்’ (adermatoglyphia) கண்டறியும் ஒரு நபரின் ஆய்வு மிகப்பெரிய ஆர்வத்தை உருவாக்குவதோடு கதைசொல்லலின் பல அடுக்குகளைப் பிணைக்கிறது. மர்மதேசம், விடாது கருப்பு, ருத்ர வீணை மற்றும் சொர்ண ரேகை போன்ற முந்தைய தொலைக்காட்சி தொடர்கள் எங்களுடைய சுய படைப்பை உருவாக்க மிகப்பெரிய வழிகாட்டியாக இருந்தன.

  • மாய ரேகை தொடரை இயக்கிய உங்களின் குறிப்பிடத்தக்க நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள முடியுமா?

பத்துமலையில் அமைந்துள்ள டாமாய் குகையைக் கண்டுபிடித்தது மிகவும் மறக்க முடியாதத் தருணங்களில் ஒன்று என நான் கூறுவேன். வளாகத்தின் முக்கிய இடமாகத் திகழ்ந்ததை தவிர, இக்குகை இந்த தொடரின் முக்கிய அம்சமாகவும் இருந்தது. குறிப்பிடத்தக்க அம்சங்களைக் கொண்ட ஒரு குகை கதைக்கு இன்றியமையாதத் தேவையாக இருந்தது. அந்த குகையிலும் அதைச் சுற்றியுள்ள வன பகுதியிலும் படப்பிடிப்பு நடத்த அனுமதி பெற்றது என்றென்றும் நிலைத்திருக்கும் மிக முக்கியமான நினைவாக இருந்தது.

கவிதா தியாகராஜன் & மூன் நிலா, நடிகர்கள்:

  1. மாய ரேகை தொடரில் நீங்கள் வகிக்கும் கதாபாத்திரத்தைப் பற்றிப் பகிர்ந்து கொள்ள முடியுமா?

கவிதா: மாய ரேகை என் மனதிற்கு மிகவும் நெருக்கமான தொடர். நான் ‘சயூரி’ என்ற தைரியமான மற்றும் இரக்கமற்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்தேன். ஒரு நடிகையாக என்னுடைய பல வருட அனுபவங்களில், ‘சயூரி’ போன்ற ஒரு கவர்ச்சியான பாத்திரத்தை நான் இதுவரை நடித்ததில்லை. ‘இரணியச்சன்’ கடவுளை இறப்பிலிருந்து எழுப்ப, ‘அங்கைச் சுவடி’ எனும் சுவடியைத் தேடும் முயற்சியில் தன் ஆன்மாவைத் தியாகம் செய்ய தயாராக இருக்கும் ஒரு வீரமான பெண் சயூரி. நமது இந்திய புராணக் கதைகள் பலவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளபடி ‘சயூரி’ ஓர் உண்மையான வீரப் பெண்ணாக நான் கற்பனை செய்தேன். மறுக்கமுடியாத அற்புதமான இந்த தொடரில் அவரது பாத்திரத்தைச் சிறப்பாகச் சித்தறிக்க நான் பல முயற்சிகளை மேற்கொண்டேன்.

மூன் நிலா: பாலியல் தொழிலாளியாக நடிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வெகு நாளாக இருந்தது. அது மாய ரேகை மூலம் நிறைவேறியது. பலர் இப்பாத்திரத்தை நடிக்க மறுப்பார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை இப்பாத்திரம் கடல் போன்ற ஆழமான பல்வேறு உணர்ச்சிகளைக் கொண்டுள்ளது என்று நினைக்கிறேன். எந்தவொரு கதாபாத்திரத்தையும் மிகுந்த மரியாதையுடனும் கண்ணியத்துடனும் சித்தரிக்க வேண்டும் என்ற எனது கொள்கையை ஆபாசமான காட்சிகள் இல்லாமல் இந்த பாத்திரம் பூர்த்தி செய்தது. பாலியல் தொழிலாளர்கள் பெரும்பாலும் தவறான கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்கப்படுகின்றனர். வாழ்வுக்காக மட்டுமே அந்த வேலையில் அவர்கள் ஈடுபடுகிறார்கள் என்பதையும் அவர்களும் உணர்ச்சிகளைக் கொண்ட மனிதர்கள் என்பதையும் மக்கள் பொதுவாகப் புரிந்துக் கொள்ளத் தவறிவிடுகிறார்கள். இந்தக் கதாபாத்திரத்தின் இயல்பு காரணமாக இந்தப் பாத்திரத்தைப் புரிந்துகொள்வதற்கும் சித்தரிப்பதற்கும் எனக்கு மிகவும் சவாலாக இருந்தது.

மாய ரேகை தொடரில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?

கவிதா: ‘சயூரி’ கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கும் வகையில் எனது குரல் ஏற்ற இறக்கம், முக பாவனை என அனைத்து அம்சங்களிலும் நான் முழு உழைப்பை வழங்கியதோடு அர்ப்பணித்தும் உள்ளேன். ‘சயூரி’ கதாபாத்திரத்தில் நடிக்க இவ்வளவு பெரிய வாய்ப்பை வழங்கிய மாய ரேகை குழுவினருக்கு நன்றி.

மூன் நிலா: இயக்குநரும் தயாரிப்பாளரும் இந்த பாத்திரத்தை உறுதிப்படுத்திய தருணத்தில், எனது கனவு பாத்திரத்தைச் செவ்வென நடிக்க என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்ய விரும்பியதால் எனக்கு ஒருவித பயம் ஏற்பட்டது. தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் இந்த தொடர் முழுவதும் என்னை ஆதரித்து, ஊக்கப்படுத்தினர். அந்த வகையில், தங்களின் விலை மதிப்பற்ற ஆதரவுக்காக ஒவ்வொருவருக்கும் இந்த வேளையில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதுமட்டுமின்றி, இந்த தொடர் முழுவதும் எனக்குப் புடவை அணியும் வாய்ப்புக் கிடைத்தது. புடவை மீதான எனது விருப்பத்தை அது பூர்த்திச் செய்தது. ஒவ்வொரு நபருக்கும் ஒரு கதை உள்ளது மற்றும் அவரவர் கதையில் அவரவர்தான் கதாநாயகன்/கதாநாயகி. எனவே, யாரையும் குறைவாகவோ தவறாகவோ மதிப்பிடக்கூடாது, எல்லோரிடமும் அன்பாக இருக்க வேண்டும். ஒவ்வொரு திங்கள் முதல் வியாழன் வரை ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202)-இல் தொடரின் புதிய அத்தியாயங்கள் முதல் ஒளிபரப்புக் காண்கின்றன. இரசிகர்கள் அவற்றைப் பார்த்து, எதிர்காலப் படைப்புகளை மேம்படுத்த உதவும் மதிப்புமிக்க நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.