தாய் சொல்லை வேத வாக்காகக் கருதி வாழ்வில் உயர்ந்த டாக்டர் சுப்ரமணியம்!

73

கோலாலம்பூர், மே 14-

கல்வி ஒன்றுதான் நிரந்தர சொத்து என தனது தாய் சொன்ன சொல்லை தெய்வ வாக்காக எடுத்து கொண்டு கல்வியில் சாதனை படைத்துள்ளார் டாக்டர் சுப்ரமணியம் கோவிந்தன்.

கெடா, சுங்கை கெத்தா பிடோங் எனும் தோட்டத்தில் பிறந்த இவர் இளம் வயதில் பல்வேறு துன்பங்களை அனுபவித்துள்ளார்.

தனது தந்தை கோவிந்தன் அரசியல் பிரதிநிதியாக இருந்தாலும் வருமான ரீதியில் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் மூத்த மகனாக அவர் பிறந்துள்ளார்.

இருந்தாலும் தம்மை ஒரு பட்டதாரியாக உருவாக்க வேண்டும் என இவரது தந்தை ஆசைப்பட்டார்.

சுங்கைப்பட்டாணி இப்ராஹிம் பள்ளியில் கல்வியை முடித்த அவர் பின்னர் 6ஆம் படிவ கல்வியை தொடர்ந்தார்.

அதன் பின்னர் அச்சகத் துறையில் தொழில் கல்வி கற்று அங்கேயே பேராசிரியராகவும் பணி புரிந்ததாக சுப்ரமணியம் கூறினார்.

யு.எஸ்.எம். பல்கலைக்கழத்தில் வேலை கிடைத்து’ N9′ எனும் மிகச் சிறிய நிலையிலான வேலைக்கு 350 வெள்ளி சம்பளத்தில் பணியாற்றினார்.

வாழ்க்கையில் தொடர்ந்து கல்வி கற்க வேண்டும். பெற்றோருக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் போராடி வந்த நேரத்தில் தனது தாயின் மறைவு தம்மை சோகக் கடலில் ஆழ்த்தியதாக சுப்ரமணியம் கண்ணீர் மல்க கூறினார்.

அதன் பின்னர், கடுமையான உழைப்பின் பலனாக 5 ஆண்டுகளில் N9 கிரேட்டில் இருந்து 17 வரையில் உயர்ந்ததாக அவர் சொன்னார்.

அதோடு நின்று விடாமல் வர்த்தகத் துறையில் ஐந்தாண்டுகள் கல்வி தொடரப்பட்டது. அதே சமயம் முதுகலை பட்டப் படிப்பையும் அவர் தொடர்ந்துள்ளார்.

கல்வியில் தொடர் சாதனைகளின் பரிசாக N41 கிரேட் பிரிவில் யுஎஸ்எம் பல்கலைக்கழகத்தில் துணை பதிவாளராக பணி புரிந்து இறுதியாக N52 எனும் உயரிய பதவியில் அமர்ந்தார்.

தம்முடைய இந்த வெற்றிக்கு பெற்றோர் எவ்வளவு துணை புரிந்தார்களோ அத்தனை அளவிற்கு தனது மனைவியும் பேராதரவு வழங்கியதாக அவர் சொன்னார்.

தமிழ்ப்பள்ளி ஆசிரியரான அவர் தம்முடைய குடும்பத்தையும் சிறப்பான முறையில் வழிநடத்தினார்.

3 முறை மாநில ரீதியில் விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டார். .

இறுதியாக கடந்த 2020ஆம் ஆண்டு வர்த்தக நிர்வாக துறையில் கல்வி கற்று முனைவர் பட்டத்தைப் பெற்றுள்ளார்.

இது தமது தந்தையின் கனவாகும் என்பதை அவர் நினைவு கூர்ந்தார்.

“எனது மூன்று தங்கைகளையும் ஒரு சகோதரையும் மேல் படிப்பு படிக்க வைக்க முடியாமல் போனதை எண்ணி வருந்தியுள்ளார். அதனை நிவர்த்தி செய்ய உடன்பிறந்தவர்களின் பிள்ளைகள் அனைவரையும் பட்டதாரிகளாக உருவாக்கினேன்” என்றார்.

“எனது மூத்த மகன் மருத்துவராக பணிபுரிகிறார். இரண்டாவது மகள் மருந்தக துறையில் பட்டம் பெற்றுள்ளார். மூன்றாவது மகள் யுஎஸ்எம் பல்கலைக்கழகத்தில் வர்த்தக நிர்வாக துறையில் இளங்கலை பயின்று வருகிறார்”.

” அதோடு, பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர்களின் நலன் அமைப்புகளில் பணியாற்றி ஆயிரக்கணக்கான மாணவர்களை பட்டதாரிகளாகவும் உருவாக்கியுள்ளேன்” என்றார்.

ஆண்டுக்கு 100 இந்திய பட்டதாரி மாணவர்களை உருவாக்க வேண்டும் என்ற கொள்கையுடன் செயல்பட்டு வருகிறேன்.

60 வயதான பின்னர் ஓய்வு பெற்றாலும் தனியார் கல்வி நிறுவனத்தில் இயக்குனராக பணியாற்றி மாணவர்களுக்குக் கல்வி சார்ந்த பயிற்சிகளை வழங்கி வருகிறேன்.

அண்மையில், ஒய்.எஸ்.எஸ் எனப்படும் மாணவ தன்னார்வ வாரியத்தின் புதிய இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒற்றுமை துறை அமைச்சர் டத்தோ ஏரன் ஆகோ டாகாங், அந்த நியமன கடிதத்தை வழங்கியுள்ளார்.

என் தாய் எனக்கு சொன்ன அறிவுரையைத்தான் இன்றைய இளைஞர்களுக்கு நான் கூற விரும்புகிறேன்.

கல்வி மட்டுமே நமது அசைக்க முடியாத சொத்து. எனவே, துறைகளைத் தேர்வு செய்யாமல் கிடைத்த துறையில் சாதனை படைக்க வேண்டும் என டாக்டர் சுப்ரமணியம் அறிவுத்தினார்.