டத்தோ சசிகலா உட்பட சிறந்த பெண்மணிகளுக்கு விருது!

70

கிள்ளான், மே 20-

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்மணிகளை கௌரவிக்கும் வகையில் விருது வழங்கும் நிகழ்வு ஒன்று அண்மையில் கிள்ளான், பிரிமியர் ஹோட்டலில் நடைபெற்றது.

செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்வி, தொழில்முனைவர், சமூகப் பணி, விளையாட்டு உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்கள் விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.

அந்த வகையில் 2024ஆம் ஆண்டின் சிறந்த பெண்மணிக்கான விருதை சிலாங்கூர் மாநில போலீஸ் துணைத் தலைவர் டத்தோ சசிகலா சுப்ரமணியம் பெற்றார்.

இவரையடுத்து, கல்வி பிரிவுக்கான சிறந்த பெண்மணி விருதை திருமதி எலிசபெத் சைமனும், பெண் தொழில்முனைவருக்கான விருதை புவான் சுராய்னி வாஹாப்பும், சமூக சேவைக்கான விருதை திருமதி லியோங் கெக் மோல், திருமதி ஒய்.எம்.ஓங், புவான் அனிதா மாட் இட்ரிஸ் ஆகியோரும் பெற்றனர்.

தனுஸ்ரீ ஸ்ரீ முகுந்தன் என்ற கிரிக்கெட் விளையாட்டாளர் அனைத்துலக ரீதியில் விளையாட்டுக்கான சிறந்த பெண்மணி விருதைப் பெற்ற வேளையில், வளர்ந்து வரும் சிறந்த பெண் தொழில்முனைவர்களுக்கான விருதை குமாரி பிரேம சூரியா நாராயணன், குமாரி திலகா முனியாண்டி, திருமதி ஷிர்லி சேம்சன் ஆகியோர் பெற்றனர்.

செந்தோசா சட்டமன்றத்தின் பெயருக்குப் புகழ் சேர்த்து நன்முறையில் பங்களித்த இவர்கள் அனைவருக்கும் குணராஜ் ஜோர்ஜ் தமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதோடு தொடர்ந்து வெற்றி பெற கடுமையாக முயற்சிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.