கோலாலம்பூர், ஜூலை 10-
தற்போதைய டிஜிட்டல் நடைமுறை வாழ்க்கையின் கீழ் மாற்றுத் திறனாளிகளின் நலன்களை மேம்படுத்துவது குறித்து டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோவுடன் மலேசிய மாற்றுத் திறனாளிகளுக்கான தன்னிலை பயிற்சி மையம் (ஐஎல்டிசி) கலந்துரையாடல் ஒன்றை நடத்தியது.
தலைநகர், பெர்சியாரான் கேஎல்சிசியிலுள்ள அமைச்சரின் அலுவலகத்தில் இச்சந்திப்பு கூட்டம் நேற்று நடைபெற்றதாக ஐஎல்டிசியின் தலைவர் பிரான்சிஸ் சிவா தெரிவித்தார்.
மாற்றுத் திறனாளிகள் சுய காலில் நிற்பதோடு மற்றவர்களின் நிதியுதவியைச் சார்ந்திருக்காமல் இருப்பதற்குப் பல்வேறு வகைப் பயிற்சித் திட்டங்கள் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
அந்த வகையில் மாற்றுத் திறனாளிகளுக்குச் சாத்தியமான பயிற்சித் திட்டங்கள் வழங்குவது குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டது. அதே வேளையில், இவர்களுக்கு உரிய உதவிகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இவ்வேளையில், எங்களின் குறைகளைச் செவிமடுத்த அமைச்சருக்கு மனமார்ந்த நன்றியை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம் என்று பிரான்சிஸ் சிவா கூறினார்.