கோலாலம்பூர், ஜூலை 13-
இந்தியர் உருமாற்றுப் பிரிவு (மித்ரா) வாயிலாக நாடு முழுமையும் உள்ள பி40 பிரிவைச் சேர்ந்த 1 லட்சத்து 35,000 பேர் கடந்தாண்டு பயனடைந்ததாக பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் தெரிவித்தார்.
இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்காக அரசாங்கம் மித்ராவின் வாயிலாக ஆண்டுதோறும் 100 மில்லியன் வெள்ளியை ஒதுக்கீடு செய்து வருகிறது.
இதன் அடிப்படையில் கடந்த ஆண்டுக்கான மித்ராவின் 100 மில்லியன் வெள்ளி ஒதுக்கீடு பி40 மக்களுக்கு முழுமையாகப் பயன்படுத்தப்பட்டதாக மக்களவையில் பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் சிவக்குமார் எழுப்பிய கேள்விக்கான தமது எழுத்துப்பூர்வமான பதிலில் பிரதமர் குறிப்பிட்டார்.
கடந்தாண்டு மட்டும் மித்ராவின் வாயிலாக 216 திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றின் வாயிலாக 135,000 பேர் பயனடந்ததாகக் கூறப்பட்டது.
இந்திய சமுதாய உருமாற்றத்திற்காக 43 திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. 21,321 பேர் பயனடைந்த இத்திட்டங்களுக்காக 35,278,580.46 வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
சமூகம், வர்த்தகம் மற்றும் வேலை வாய்ப்புக்காக 113 திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.
35,034,811.90 வெள்ளியை உட்படுத்திய இத்திட்டங்கள் வழி 83,883 பேர் பயனடைந்தனர்.
இதனையடுத்து, இந்திய சமூக நல உருமாற்றத்திற்கான 60 திட்டங்கள் வழி 29,043 பேர் பயனடைந்தனர். இவற்றிற்கு 29,686,607.64 வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதே வேளையில், 15,300 பேர் பயனடையும் வகையில் இவ்வாண்டு ஜூன் மாதம் வரை 40 மில்லியன் வெள்ளியை உட்படுத்திய நான்கு திட்டங்கள் அமலில் இருப்பதாகவும் அன்வார் சொன்னார்.





