ஸ்கூடாய் அக் 20:
ஸ்கூடாய் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலய இளைஞர் பிரிவும், முத்தியாரா ரினி தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களும் இணைந்து ஏற்பாடு செய்த சரஸ்வதி பூஜை, ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.
கல்வியிலும் ஒழுக்கத்திலும் மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டி நடைபெற்ற இவ்விழாவில், மாநிலத் தமிழ்ப்பள்ளிக் கண்காணிப்பாளர் இரவிச்சந்திரன், தலைமையாசிரியர் தமிழ்ச்செல்வி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ஆலய நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என ஏறத்தாழ 350 பேர் பங்கேற்றனர்.
விழாவின் சிறப்பு அம்சமாக, ஸ்ரீராயர் நடனக்குழு மாணவர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி இடம்பெற்றது. மேலும், மாணவர்களின் கல்வி வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் நோட்டுப் புத்தகங்கள் மற்றும் எழுதுகோல்கள் அடங்கிய அன்பளிப்புப் பைகளும் வழங்கப்பட்டன.
ஆன்மிகம், கல்வி, கலை ஆகியவற்றை ஒருங்கிணைத்த இவ்விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைந்த இந்நிகழ்ச்சி அனைவரின் பாராட்டையும் பெற்றது.


