Homeசமூகம்கூலாய் வட்டார ஆலயங்களுக்கான நிதியுதவி தொடரும் ! – தியோ நீ சிங் உறுதி

கூலாய் வட்டார ஆலயங்களுக்கான நிதியுதவி தொடரும் ! – தியோ நீ சிங் உறுதி

கூலாய், ஜூலை 16-
கூலாய் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் உள்ள 18 ஆலயங்கள் மற்றும் இந்திய அரசு சாரா இயக்கங்களுக்கு கடந்தாண்டு மொத்தம் 97,000 வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.

முழுமையான ஆவணங்கள் மற்றும் விண்ணப்பங்கள் இத்தொகுதியின் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட பின்னர், அவை அங்கீகரிக்கப்பட்டதாக கூலாய் நாடாளுமன்ற உறுப்பினர் தியோ நீ சிங் தெரிவித்தார்.

“இத்தொகுதியின் கீழ் பதிவு பெற்ற ஆலயங்கள் முறையான ஒதுக்கீட்டைப் பெற விண்ணப்பங்களைக் கூலாய் நாடாளுமன்ற மக்கள் சேவை மையத்தில் சமர்ப்பிக்கலாம் ” என்றார்

முன்னதாக, ஜோகூர், கூலாயில் இருக்கும் அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற வருடாந்த உற்சவத்தில் கலந்து சிறப்பித்து, நன்கொடையாக 5,000 வெள்ளியை வழங்கினார்.

“வழங்கப்பட்ட இந்த உதவி நிதி, ஆலய வருடாந்திர பிரார்த்தனை சிறப்பாக நடைபெற உதவும் என நம்புகிறேன்” என்றார்.

2023 -இல் இக்கோவிலுக்கு வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சின் ஒதுக்கீட்டில் 96,000 வெள்ளி உதவி நிதி கிடைத்துள்ளதையும் தியோ சுட்டிக் காட்டினார்.

கூலாய் நாடாளுமன்ற மக்களுக்கு சிறந்த சேவையை தொடர்ந்து வழங்குவேன் என்றும் தொடர்பு துணை அமைச்சருமான தியோ உறுதியளித்தார்.

“கூலாய் நாடாளுமன்ற மக்களின் நல்லிண்ணக்கமும், ஒற்றுமையும் தொடர்ந்து காக்கப்படும் வகையில் ஆண்டுதோறும் அனைத்து மதத்தினருக்குமான நிதி ஒதுக்கீடு அரசியல் பின்னணி பார்க்காமல் வழங்கப்பட்டு வருகிறது” என்பதை துணையமைச்சர் சுட்டிக் காட்டினார்.

கடந்த மாதம், கூலாய் நாடாளுமன்றத்தில் வருடாந்திர உற்சவத்தை ஏற்பாடு செய்த மூன்று ஆலயங்களான லாடாங் கெளன் ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயம், லாடாங் சேடனாக் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் மற்றும் செங்காங் ஸ்ரீ மாரியம்மன் அம்மன் ஆலய சிறப்புப் பிரார்த்தனையில் கலந்து சிறப்பித்ததோடு, மொத்தம் 13,000 வெள்ளி நன்கொடையாக தியோ வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_img

latest articles

explore more