கோலாலம்பூர், ஜூலை 25 –
அண்மையில் நடந்து முடிந்த மஇகா இளைஞர் பிரிவு தேர்தலைத் தொடர்ந்து தனது அடுத்தக் கட்ட
நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தயாராகிவிட்டது சிலாங்கூர் மாநில மஇகா இளைஞர் பிரிவு.
தொகுதி பொறுப்பாளர்கள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கும் பொருட்டு சிலாங்கூர் மாநில மஇகா இளைஞர் பிரிவு தலைவர் சுந்தரம் குப்புசாமி தலைமையில் சிறப்பு கூட்டம் ஒன்று நடைபெற்றது .
தலைநகர் மஇகா தலைமையகத்தில்
நடைபெற்ற இக்கூட்டத்தில் சிலாங்கூர் மாநில மஇகா இளைஞர் பிரிவின் இலக்கு மற்றும் அடுத்த கட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
அதே வேளையில், விரைவில் நடைபெறவிருக்கும் மாநில மஇகா இளைஞர் பிரிவு பேராளர் மாநாடு குறித்தும் பேசப்பட்டது .
இக்கூட்டத்தில் சிலாங்கூர் மாநில இளைஞர் பிரிவு தொகுதி தலைவர்கள் கலந்து கொண்டனர் .
தன்மீது நம்பிக்கை வைத்து சிலாங்கூர் மாநில மஇகா இளைஞர் பிரிவின் தலைமைத்துவ பொறுப்பை தன்னிடம் ஒப்படைத்த கட்சியின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ். ஏ. விக்னேஸ்வரன் மற்றும் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் ஆகியோருக்கு சுந்தரம் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
மஇகா தேசிய இளைஞர் பிரிவு தலைவர் அரவிந்திற்கும் நன்றி மலர்களைச் சமர்ப்பித்தார் சுந்தரம்.