பிரான்சிஸ் சில்வனின் ‘வெற்றி என் வாசலில்’ தொலைக்காட்சி திரைப்படம் டிவி2ல் ஜனவரி 20ஆம் தேதி திங்கட்கிழமை இரவு 9 மணிக்கு ஒளியேறவிருக்கிறது.

ஓர் இளம் பெண் அழகு சாதன மின்னியல் வர்த்தக துறையில் சந்திக்கும் போராட்டங்கள் & சவால்களை இத்திரைப்படம் சித்தரிக்கிறது. முழு மூச்சோடு ஈடுபட்டதால் சொந்த வாழ்க்கை மற்றும் குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளையும் அதை அவள் எப்படி வெற்றிகொள்கிறாள் என்ற விருவிறுப்பான கதைக் களத்தை திரைகதையாக முன்வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு மணி நேர தொலைக்காட்சி திரைப்படத்தின் முக்கிய சில காட்சிகள் தென் கொரிய தலை நகரமான சியோலில் படமாக்கப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் தென் கிழக்கு ஆசிய நாடுகளான கம்போடியா, பாலி இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் தமிழ்நாடு, கேரளா, மலைப் பிரதேசமான நேப்பாள், ஆப்பிரிக்க கண்டத்தை ஒட்டியுள்ள மொரிஷியஸ் ஆகிய நாடுகளில் தொலைக்காட்சி நாடகங்களையும் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் வெற்றிகரமாக படமாக்கி இருந்தாலும் தென் கொரியாவின் சியோலில் படப்பிடிப்பு செய்வது சவால் மிகுந்த ஒன்றாக இருந்ததாக படப்பிடிப்பு குழுவினர் கூறினர்.

மலேசிய தொலைக்காட்சி திரைப்பட வரிசையில் தென் கொரியாவில் படமாக்கப்பட்டுள்ள முதல் தமிழ் தொலைக்காட்சி திரைப்படம் என்ற பெருமையையும் பெறுகிறது “வெற்றி என் வாசலில்”.

இதில் நித்யாஸ்ரீ, சாந்தினி கவுர், நிவாஷன், சந்திரன், கீதாஞ்சலி, சரவணன், யுவானா, இவராணி, நவீனா, ஈப்போ விஜய், ஆதவன், சச்சினானந்தன், செல்வராஜ், பிரியன், நிஷாந்த், பரத நாட்டிய ஆசிரியை இந்திரா மாணிக்கம் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்க ஒளிப்பதிவை கனகராஜ் செய்ய படத்தொகுப்பை சகாயம் சில்வன் செய்திருக்கின்றார்.

சிங்கை பாடகர், இசைஅமைப்பாளர் “முகமது ரஃபியின் வான் தந்த வரம்” என்ற பாடலும் இதில் இடம்பெற்றுள்ளது. அனிமேஷன் கிராபிக் பணிகளை கேசவன் செய்துள்ளார் இந்த தொலைக்காட்சி திரைப்படத்திற்கு இசையமைப்பு செய்துள்ளார் பாலாஜி.

சிறந்த ஒளிப்பதிவுடன் விறுவிறுப்பான காட்சி அமைப்புடன் கூடிய ‘வெற்றி என் வாசலில்’ தொலைக்காட்சி திரைப்படத்தை ஒளிப்பதிவுக்கும், இயக்கத்திற்கும் பிரசித்தி பெற்று பல உயரிய விருதுகளை வென்றுள்ள தயாரிப்பு நிறுவனமான சப்தம்ஸ் விஷன் உருவாக்கியுள்ளது.