Homeசமூகம்பத்திரிகையாளர்களின் அர்ப்பணிப்பு உணர்வு போற்றத்தக்கது!  டத்தோஸ்ரீ சரவணன்  புகழாரம் 

பத்திரிகையாளர்களின் அர்ப்பணிப்பு உணர்வு போற்றத்தக்கது!  டத்தோஸ்ரீ சரவணன்  புகழாரம் 

கோலாலம்பூர், ஜன.30-பல்வேறு சவால்களுக்கு மத்தியில் மக்களுக்குத் துல்லிதமான செய்திகளைக் கொண்டு சேர்ப்பதில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பாடுபடுபவர்கள் பத்திரிகையாளர்கள். இவர்கள் உண்மையில் கொண்டாடப்பட வேண்டியவர்கள் என்று மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.

எந்தவொரு செய்தியாக இருந்தாலும் அதனை உண்மை நிலை மாறாமல் சமூகத்திடம் கொண்டு சேர்ப்பதில் இவர்கள் ஆற்றி வரும் பங்கு அளப்பரியது என்றார் சரவணன்.

இத்தகைய பணியை ஆற்றி வரும் அச்சு மற்றும் மின்னியல் துறை பத்திரிகையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கென தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம் குடும்ப தின விழாவை நடத்தி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. சங்க உறுப்பினர்கள் ஒன்று கூடி மகிழ்ச்சியாக இருப்பதற்கும் தங்களிடையிலான உறவை மேம்படுத்திக் கொள்வதற்கும் இந்நிகழ்ச்சி பெரிதும் துணை புரிகிறது என்று இங்குள்ள தாமான் கோப்பராசி போலீஸ் 2, பொது மண்டபத்தில் நடைபெற்ற மலேசிய தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் குடும்ப தின விழாவிற்குத் தலைமையேற்று ஆற்றிய உரையில் குறிப்பிட்டார்.

“சமுதாயத்தின் குரலாக ஒலிப்பவர்கள் பத்திரிகையாளர்கள். இதில் பத்திரிகை தர்மம் என்பது மிக முக்கியம். இது வாழ்வதும் வீழ்வதும் இவர்களின் கைகளில்தான் உள்ளது” என்றார்.

முத்தமிழ் மன்னன் தலைமையில் இச்சங்கம் சிறந்த தலைமைத்துவத்தைக் கொண்டிருப்பதைப் பாராட்டிய தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணன் இச்சங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் 5,000 வெள்ளியை வழங்குவதாகக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து இவர் மூத்த பத்திரிகையாளர்கள் மற்றும் பணியாளர்களை பொன்னாடை மற்றும் மாலை அணிவித்து சிறப்பித்தார்.

இந்நிகழ்ச்சிக்கான உணவு செலவை கொடை நெஞ்சர் ரத்னவள்ளி அம்மையார் ஏற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மைலோ உள்ளிட்ட நிறுவனங்கள், இயக்கங்கள், வர்த்தக பெருமக்கள் , தனி நபர்கள் என நல்லுங்களின் பேராதரவில் முத்தமிழ் மன்னன் தலைமையில், விழா ஏற்பாட்டு குழு தலைவர் ஜீவா மற்றும் செயற்குழுவினரின் ஆக்கப்பூர்வ நடவடிக்கையின் கீழ் சங்கத்தின் 2025 குடும்ப தினம் நேற்று விழாக் கோலம் கண்டது.

கிறிஸ்ட் சின்னப்பனின் விறுவிறுப்பான அறிவிப்பு, எஸ்எஸ்ஆர் குழுவினரின் கண் கவர் நடனங்கள், கலைஞர்களின் செவிக்கினிய பாடல்கள், சங்க உறுப்பினர்கள் உஷா, டத்தின் கோகிலவாணி, சுமதி மற்றும் சுகுமாறின் பாடல் அபிநயம், சேலை மற்றும் சுடிதார் அழகு ராணி போட்டி, பாடலுக்கான சிறார்களின் அபிநயம் போன்றவை விழாவுக்கு மெருகூட்டின.

மின்னியல் சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பரிசுகளைக் கொண்ட அதிர்ஷ்ட குலுக்கு அங்கம் சங்க உறுப்பினர்களுக்கு பேராவலைத் தந்தது என்றால் மிகையாகா.

அவ்வகையில் இக்குடும்ப தின விழாவின் அதிர்ஷ்ட குலுக்கில் முதல் பரிசான துணி சலவை இயந்திரத்தை வென்ற அதிர்ஷ்டசாலியானார் தலைநகரைச் சேர்ந்த கலைஞர் உஷா.

இரண்டாவது பரிசான கைத்தொலைபேசியை தீபன் (தமிழ் லென்ஸ்)வென்ற வேளையில் மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது பரிசுகளான சைக்கிள்களை முறையே டி.காளிதாஸ் (தமிழ் லென்ஸ்),மீனாட்சி (தமிழ் நேசன்) மற்றும் குணா (மலேசிய நண்பன்) ஆகியோர் வென்றனர்.

தங்கள் குடும்ப உறுப்பினர்களோடு சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்ட இவ்விழாவில் மஇகா தேசிய உதவி தலைவர் டத்தோ டி.முருகையா, இளைஞர் பிரிவு தலைவர் அர்விந்த் கிருஷ்ணன், ம இகா தேசிய விளையாட்டு பிரிவு தலைவர் ஆண்ட்ரூ டேவிட் , புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ரஜீவ் , கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ், அமைச்சர் பாமி பட்சிலின் சிறப்பு அதிகாரி டத்தோ சிவபாலன், ஸ்பான் தலைவர் சார்லஸ் சந்தியாகோ, ஜெயபக்தி நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ டாக்டர் கு.செல்வராஜ், டத்தோ இராமநாதன், உலு சிலாங்கூர் கவுன்சிலர் புவனேஸ்வரன் பச்சைமுத்து, விலாயா மாநில பிபிபி கட்சியின் தலைவர் சத்தியா சுதாகரன், ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் இணை இயக்குனர் சுரேந்திரன், இதர அரசு மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் என திரளானோர் கலந்து சிறப்பித்தனர்.

 

spot_img

latest articles

explore more