கோலாலம்பூர் பிப். 1-தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக புத்தகங்களை எழுதியிருக்கும் ஆசிரியர்கள் எழுத்தாளர்களாக உருமாறி இருப்பது பாராட்டுக்குரியது என்று குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ டாக்டர் கு. செல்வராஜ் புகழாரம் சூட்டினார்.
தங்களின் கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு மத்தியில் மாணவர்களுக்காக புத்தகத்தை எழுதும் நடவடிக்கையில் இவர்கள் ஈடுபட்டிருப்பது தமிழ்ப்பள்ளி மாணவர்களின் நலனில் இவர்கள் கொண்டிருக்கும் அக்கறையையே காட்டுகிறது என்றார்.
சுங்கை பூலோ தமிழ்ப் பள்ளி தலைமையாசிரியர் திருமதி மகேஸ்வரி தலைமையில் 65 ஆசிரியர்கள் புத்தக தயாரிப்பு பணியில் முழு மூச்சாக ஈடுபட்டனர்.
இவர்கள் அனைவரையும் குயில் ஜெயபக்தி மண்டபத்தில் இன்று நடைபெற்ற விழாவில் டத்தோ கு. செல்வராஜ் பாராட்டி சிறப்பு செய்ததோடு நற்சான்றிதழ்களையும் வழங்கினார்.
இந்த விழாவில் சிறப்பு பிரமுகர்களாகக் கலந்து கொண்டமலேசிய தமிழ்ப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மன்றத்தின் தேசிய தலைவர் எஸ்.எஸ். பாண்டியன், செயலாளர் தமிழரசு சுப்ரமணியம் , சுங்கை பூலோ தமிழ்ப் பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி மகேஸ்வரி மற்றும் கிள்ளான் மாவட்ட ரோட்டரி கிளப் பிரதிநிதி சரத் ஆகியோரையும் குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ கு. செல்வராஜ் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சிறப்பு செய்தார்.

தமிழ் ஆசிரியர்களின் எழுத்து படைப்புகளை புத்தகமாக வெளியிட குயில் ஜெயபக்தி நிறுவனம் உரிய ஏற்பாடுகளைச் செய்யும் என்றார்.
“ஆசிரியர்கள் பிரதிபலன் பாராமல் தங்கள் பணியை மேற்கொள்ள வேண்டும். அதற்குரிய வெகுமதி அவர்களை நிச்சயம் நாடி வரும்”என்று அவர் மேலும் சொன்னார்.
கல்வி கற்ற சமுதாயத்தை உருவாக்குவோம். இதில் புத்தகம் வாசிப்பதும் அடங்கும் என்றார்.
நாட்டில் கடந்த 48 ஆண்டுகளாக இயங்கி வரும் குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் தமிழ் சேவையை நிகழ்ச்சியில் தலைமையுரை ஆற்றிய எஸ்.எஸ். பாண்டியன் வெகுவாகப் பாராட்டினார்.
மாணவர்களை பண்புமிக்க மனிதர்களாக உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள். இவர்களின் பணி என்றும் போற்றுதலுக்குரியது என்று தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றத்தின் தேசிய தலைவர் எஸ். எஸ். பாண்டியன் வருணித்தார்.
அவ்வகையில் கல்வி மட்டுமல்லாது சமூகத்தில் பண்புநெறிமிக்கவர்களாக மாணவர்களை உருவாக்கும் சிற்பிகள் இவர்கள். இப்போது எழுத்தாளர்களாகவும் உருமாறியுள்ளனர். பல்வேறு ஆற்றல் உடையவர்கள் ஆசிரியர்கள் என்றார்.
இதனிடையே, தமிழ், ஆங்கிலம், மலாய், கணிதம், அறிவியல் போன்ற முக்கிய பாடங்களைக் கொண்டு 4ஆம்,5ஆம் மற்றும் 6ஆம் ஆண்டு மாணவர்களுக்காக 18 புத்தகங்கள் தயாரிக்கப்பட்டிருப்பதாக தலைமையாசிரியர் திருமதி மகேஸ்வரி குறிப்பிட்டார்.
“சுமார் 6 மாதங்கள் எடுத்துக் கொண்ட இப்பணியில் மொத்தம் 65 ஆசிரியர்கள் தங்களின் கடின உழைப்பைச் சிந்தினர்”என்றார்.
எல்லா மாணவர்களும் பயனடையும் வகையில் கேள்விகள் தயாரிக்கப்பட்டுள்ளன.இவர்கள் தங்கள் அறிவாற்றலை மேம்படுத்திக் கொள்ள உதவுவதோடு அதனை செயல்படுத்தவும் துணை புரியும் என்றார்.
இத்தகைய அரும்பணியை மேற்கொள்வதற்கு தங்களுக்குப் பல வழிகளில் உறுதுணை புரிந்த ஜெயபக்தி நிறுவனத்தின் உரிமையாளருக்கு இவ்வேளையில் தனது நன்றியையும் பாராட்டையும் இவர் தெரிவித்துக் கொண்டார்.
.


