பாங்கி, பிப்.23-தங்களின் அடைவு நிலை குறித்த எந்தவொரு குறைபாடு மற்றும் விமர்சனத்தையும் ஏற்றுக் கொள்ள அமைச்சரவை தயாராக இருப்பதோடு அதற்குத் தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளும் என்றும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் திட்டவட்டமாகக் கூறினார்.
2025 மடானி அரசாங்கத்தின் அமைச்சரவை கூட்டத்தில் தங்களின் அடைவு நிலை குறித்து கல்வியாளர்கள் மற்றும் பொதுச் சேவை அதிகாரிகள் முன் வைத்த கருத்துகளை அமைச்சரை உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டதாக பிரதமர் தெரிவித்தார்.
“இதனையடுத்து, தங்கள் அடைவு நிலையை மேம்படுத்துவதற்கான திட்டம் மற்றும் இலக்கு குறித்து விவரிக்கும்படி அமைச்சர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்” என்றார்.
“அனைவரும் மனநிறைவான சேவையை வழங்குகின்றனர் என்று என்னால் சொல்ல முடியாது. எனினும், அமைச்சரவையின் அடைவு நிலை பெருமையளிக்கக்கூடிய வகையில் உள்ளது என்றே கூற வேண்டும். ஒவ்வொரு விமர்சனத்தையும் இவர்கள் முழு மனதோடு ஏற்றுக் கொண்டதோடு அதனை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகளை மேற்கொள்ளவும் தயாராக உள்ளனர்” என்று நேற்று இங்கு நடைபெற்ற 2025 மடானி அரசாங்கத்தின் அமைச்சரவை கூட்டம் தொடர்பான செய்தியாளர் கூட்டத்தில் பேசினார்.
பண வீக்கம் மக்களைப் பாதிக்காமல் இருப்பதற்கான அணுகுமுறைகளை அரசாங்கம் மீண்டும் ஆராய வேண்டிய அவசியம் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக அன்வார் சொன்னார்.
அடைவு நிலை பெருமையளிக்கக்கூடிய வகையில் இருப்பதை புள்ளி விவரம் காட்டுகிறது. எனினும், பொருட்கள் விலையேற்றம் போன்ற பிரச்சனைகளுக்கு அரசாங்கம் அவசியம் தீர்வு காண வேண்டும் என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
“நமது பண வீக்க விகிதம் குறைந்த அளவிலேயே உள்ளது.எனினும், அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட பொருட்களின் விலையேற்றம் மக்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது” என்றார்.


