தெலுக் இந்தான்-பிப்.23-பேரா மாநில மஇகா தொடர்பு குழு தலைவர் டான் ஸ்ரீ எம். இராமசாமியின் வேண்டுகோளுக்கு இணங்க மஇகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் தெலுக் இந்தான் மஇகா தொகுதிக்கான 10, 000 வெள்ளி மாதிரி காசோலையை வழங்கினார்.
தெலுக் இந்தான் மஇகா தொகுதியின் கட்டடத்தின் சீரமைப்புக்காக இந்த காசோலை மாநில மஇகா தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தெலுக் இந்தான் தொகுதி கிளைத் தலைவர்களைச் சந்தித்துப் பேசிய டான் ஸ்ரீ எம் இராமசாமி , கிளைத் தலைவர்கள் கட்சியை வலுப்படுத்த ஆயத்தமான நடவடிக்கைகளை எடுப்பதில் தங்களின் பங்கினை ஆற்றுவதோடு ஒவ்வொரு கிளைத் தலைவரும் கிளையில் புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
“ பொதுத் தேர்தலைச் சந்திக்க புதிய வாக்காளர்களை நாம் அடையாளம் காண வேண்டும். அத்துடன் அவர்களைக் கிளை உறுப்பினர்களாக பதிவு செய்வதும் அவசியம்” என்று வலியுறுத்தினார்.
அனைத்து தரப்பினருடன் நாம் ஒற்றுமையைப் பேண வேண்டும். ஒற்றுமையே வெற்றிக்கான வழி என குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து டான் ஸ்ரீ இராமசாமி வரும் மார்ச் 1ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ” ஏம்ஸ்ட் நமது தேர்வு” எனும் நிகழ்வினைப் பற்றி விளக்கம் அளித்தார்.
இது போன்ற முயற்சிகள் இந்திய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு மஇகா கொடுக்கும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதைச் சுட்டிக் காட்டினார்.
சிறப்பான முறையில் இந்திய சமுதாயத்திற்கும் கட்சிக்கும் சேவையை வழங்கி வரும் தெலுக் இந்தான் தொகுதி தலைவர் மணிகண்டன் மற்றும் அவர்தம் செயலவை உறுப்பினர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார் .


