Homeஅரசியல்தொகுதி தலைவர் 5 தவணைகள் மட்டுமே நீடித்திருக்க வேண்டும்!  உலு சிலாங்கூர் பிகேஆர் ஆண்டு...

தொகுதி தலைவர் 5 தவணைகள் மட்டுமே நீடித்திருக்க வேண்டும்!  உலு சிலாங்கூர் பிகேஆர் ஆண்டு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

உலு சிலாங்கூர், மார்ச் 1-ஒரு தொகுதி தலைவர் 5 தவணைகள் மட்டுமே பதவியில் நீடித்திருக்க வேண்டும் என்று உலு சிலாங்கூர் பிகேஆர் தொகுதி ஆண்டு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சில இடங்களில் 27 ஆண்டுகள் வரை ஒருவரே தலைவராக நீடித்திருக்கிறார் என்பதை உலு சிலாங்கூர் பிகேஆர் தொகுதி தலைவர் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் சுட்டிக் காட்டினார்.

இந்த நடைமுறையானது அடுத்த தலைமுறையை உருவாக்குவதில் தடங்கலை ஏற்படுத்திவிடும் என்று இங்குள்ள விஸ்மா அந்தாரா காப்பி மண்டபத்தில் உலு சிலாங்கூர் பிகேஆர் தொகுதி ஆண்டு கூட்டத்தில் தலைமையுரை ஆற்றுகையில் குறிப்பிட்டார்.

“நாட்டில் 222 பிகேஆர் தொகுதிகளைப் பார்க்கும்போது சில இடங்களில் ஒரே தலைவர் நீண்ட காலமாக பதவியில் இருக்கிறார். இந்த நிலை இனியும் நீடிக்கக் கூடாது”என்றார் பிகேஆர் தேசிய துணைச் செயலாளருமான சத்திய பிரகாஷ்.

“இதன் பொருட்டு ஒரு தொகுதி தலைவர் 5 தவணைகள் மட்டுமே நீடித்திருக்க வேண்டும் என்ற தீர்மானத்தை இந்த ஆண்டு கூட்டத்தில் உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்டது. இது கட்சியின் தேசிய மாநாட்டில் பரிந்துரை செய்யப்படும்”என்று அவர் மேலும் சொன்னார்.

இதனிடையே, டாக்டர் சத்திய பிரகாஷ் தலைமைத்துவத்தின் கீழ் உலு சிலாங்கூர் பிகேஆர் தொகுதியில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

குறிப்பாக, இந்தியர்களுக்கு பல வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளதாக இத்தொகுதியின் அமைப்பு செயலாளர் புவனேஸ்வரன் பச்சைமுத்து தெரிவித்தார்.

இவற்றில் முக்கியமானது இந்திய சமூகத்தின் பிரதிநிதிகளாக உலு சிலாங்கூர் நகராண்மைக் கழக உறுப்பினர்களாக தான் உட்பட நால்வர் நியமிக்கப்பட்டதாகும் என்றார்.

விரைவில் கட்சி தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் இத்தொகுதி தலைவர் பதவிக்கு டாக்டர் சத்திய பிரகாஷ் மீண்டும் போட்டியிட வேண்டும் என்பதே எங்கள் அனைவரின் விருப்பம்.

“இத்தொகுதியில் மீண்டும் அவரின் நிர்வாகமே செயல்பட வேண்டும் “என்றார் புவனேஸ்வரன்.

 

 

 

 

spot_img

latest articles

explore more