கோலாலம்பூர். மார்ச் 7.இந்து சமயத்தைத் தொடர்ந்து இழிவுபடுத்தி வரும் ஜம்ரி வினோத் மீது போலீஸ் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மஇகா இளைஞர் பிரிவு கேட்டுக் கொண்டது.
“ஜம்ரி வினோத் மீண்டும் மீண்டும் இந்து சமயத்தை அவமதித்து வருகிறார். இவருக்கு எதிராக அரச மலேசிய போலீஸ் படை விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மஇகா இளைஞர் பிரிவு தலைவர் அரவிந்த் கிருஷ்ணன் வலியுறுத்தினார்.
“இவர் மீது நிந்தனை சட்டம் பாய வேண்டும் “என்று இங்குள்ள மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் விவரித்தார்.
பல்வேறு சமயங்களைக் கொண்ட ஒரு நாடு மலேசியா. இங்கு எந்த ஒரு சமயத்தைச் சேர்ந்த மக்களின் உணர்வுகளைப் பாதிக்கும் வகையில் யாரும் செயலில் ஈடுபடக்கூடாது என்றார் அரவிந்த்.
இதன் அடிப்படையில் இந்து மதத்தைத் தொடர்ந்து இழிவுபடுத்தி ஜம்ரி வினோத்திற்கு எதிராக மஇகா இளைஞர் பிரிவு நாடு முழுவதும் போலீஸ் புகார் செய்து வருவதாக அவர் சொன்னார்.
இந்த விவகாரத்தை நாம் போலீஸிடமே விட்டு விடுவோம். இதில் உணர்ச்சிவசப்படக் கூடாது என்றார்.
நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து இந்த விவகாரத்தைக் கையாள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.


