கோலாலம்பூர், மார்ச் 8-உலகம் மகளினரின் சாதனைகளைப் போற்றி உலக மகளிர் நாளான இன்று எங்களின் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் அகம் மகிழ்கிறோம் என மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையின் தேசிய மகளிர் பிரிவினர் தெரிவித்தனர்.
குடும்ப ம், சமுதாயம் ஆகியவற்றைக் கட்டமைப்பதில் மகளிர் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவ்வகையில், பாலின சமத்துவம், பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றம் மூலம் மகளிருக்கான இன்னும் சிறந்தவொரு எதிர்காலத்தை உருவாக்க முடியும்.
மகளிரை உயர்த்தி அவர்களுக்குச் சம வாய்ப்புகளை வழங்குவதற்காக அரசாங்கமும் அரசு சாரா இயக்கங்களும் இணைந்து செயல்படுவது அவசியம் எனப் பேரவையின் துணைச் செயலாளர் இர.கலைமதி தெரிவித்தார்.
மேலும், நாட்டின் மகளிரை வலுப்படுத்துவது ஒரு நேர்மறையான செயலாக மட்டுமல்ல, தேசிய முன்னேற்றத்திற்கும் அவசியமானது. பெண்கள் சமத்துவ வாய்ப்புகளைப் பெறுவதன் மூலம் சமூகங்கள் மலர்கின்றன. பாலின சமத்துவம் உள்ள நாடுகளின் பொருளாதாரம் வலுவாகவும் குறைந்த குற்றச்செயல்களும் சிறந்த சமூக நலன்களுடன் இருப்பதையும் ஆய்வுகள் காட்டுகின்றன.
மகளிரின் மேம்பாடு, குடும்ப நலன், குழந்தைகளின் சிறந்த கல்வி மற்றும் சமச்சீரான தொழில்சூழல் ஆகியவற்றை உறுதி செய்கிறது என பேரவையின் துணைப் பொருளாளர் திருமதி இரா.ரோஷினி மேரி கூறினார்.
அவ்வகையில், மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவை, எப்போதும் மகளிரின் மேம்பாட்டை மையமாகக் கொண்டு செயல்படுகிறது என்பதில் பெருமிதம் அடைகிறோம். மகளிரை ஊக்குவிப்பது சிறந்த எதிர்காலத்தில் முதலீடு செய்வதற்குச் சமம் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
எழுச்சிமிக்க மகளிரை உருவாக்கி அவர்கள் முன்னேற்றம் அடைய வழிவகுக்கவும், அவர்களுக்குத் தேவையான தளங்களையும் வாய்ப்புகளையும் வழங்குவதற்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம்.
எங்களின் முகாமையான திட்டங்கள் மகளிர் தலைமைத்துவப் பயிற்சி, மகளிர் தொழில்முனைவோர் பயிலரங்கம், மகளிருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் எனத் தேசிய மகளிர் தலைவி திருமதி மு.ஷாலினி கூறினார்.
பாலின சமத்துவம் உள்ள நாடுகளின் பொருளாதாரம் வலுவாகவும் குறைந்த குற்றச்செயல்களுடன் சிறந்த சமூக நலன்களுடன் இருப்பதையும் ஆய்வுகள் காட்டுகின்றன என திருமதி இரா. ரேணுகா தேவி கருத்துரைத்தார்.
அதோடு, மகளிரை வலுப்படுத்துவது அனைத்துத் தரப்பினரின் பொறுப்பாகும். இதற்காகத் தனிநபர், பொது அமைப்புகள், அரசாங்கம் ஆகிய அனைத்து தரப்பும் இணைந்து செயல்பட வேண்டும்.
அபாலின தடைகளை முறியடித்து, சம வாய்ப்புகளை வழங்கி, மகளிரை ஒவ்வொரு துறையிலும் ஊக்குவித்து, நாம் அனைவரும் இணைந்து சிறந்த சமத்துவ சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என திருமதி சி. துர்கா தேவி கூறினார்.
பள்ளிகளில், கல்லூரிகள், அலுவலகங்கள் மற்றும் சமூக அமைப்புகள் பெண்களின் முன்னேற்றத்திற்காக பேச்சுகள், கருத்தரங்கங்கள், விருது வழங்கல் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.
பாலின சமத்துவம், பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிரான சட்டங்கள், மற்றும் பெண்கள் நலன் சார்ந்த திட்டங்கள் குறித்து மகளிரை விழிப்புணர்வுடன் செயல்படுத்துதல் வேண்டும் என மு. டிவினா குறிப்பிட்டார்.
மகளிர் கல்வியறிவு பெற்றால், அவர் தனது குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்த முடியும். இதன் மூலம், அடுத்த தலைமுறை அறிவு மிக்கதொரு தலைமுறையாக உருவாகும். குடும்ப வளர்ச்சியில், குழந்தைகளின் கல்வியிலும் நடத்தையிலும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவர் என ச.மயூரி தெரிவித்தார்.


