ஷா ஆலம், மார்ச் 16 – இலக்கவியல் துறை அமைச்சர் கோவிந்த் சிங் ஜியோ ஜசெக மத்திய செயற்குழுவிற்கான தேர்தலில் 2,785 வாக்குகள் பெற்று முன்னணி வகித்தார்.
இதனைத் தொடர்ந்து இவர் புதிதாக அமைக்கப்பட்ட மத்திய செயற்குழுவால் கட்சித்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதே வேளையில்,கட்சியின் நடப்பு தலைமைச் செயலாளர் அந்தோணி லோக் 2,508 வாக்குகள் பெற்று தனது பதவியைத் தக்க வைத்துக் கொண்டார்.
இத்தேர்தலில் 18ஆவது இடத்தைப் பிடித்த லிம் குவான் எங் கட்சியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்குள்ள ஐடியல் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற ஜசெகவின் 18ஆவது தேசிய மாநாட்டையொட்டி இக்கட்சியின் மத்திய செயற்குழுவிற்கான தேர்தல் நடைபெற்றது.
இதில், கடந்த 2022 பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் ஷாரிசான் ஜோகான், பெந்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் யங் செஃபுரா ஒத்மான் ஆகிய இருவர் மத்திய செயற்குழு உறுப்பினர்களாகத் தேர்வு பெற்றவர்களின் பட்டியலில் அடங்குவர்.
இத்தேர்தலில் செபுத்தே நாடாளுமன்ற உறுப்பினர் திரேசா கோக் மற்றும் கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் ஆகிய இருவர் தோல்வி கண்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.