சிரம்பான், மார்ச் 18-சீனாவில் இருந்து அடுத்த மாதம் இரண்டு மின்சார  ரயில்கள் (இடிஎஸ்) தருவிக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

எஞ்சிய  8 ரயில்கள் பேரா, பத்து காஜாவில் உள்ள தொழிற்சாலை வாயிலாக பொருத்தப்படும். இவை இவ்வாண்டு இறுதிவாக்கில் கட்டம் கட்டமாக சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று  அமைச்சர் குறிப்பிட்டார்.

“இப்புதிய ரயில்கள் இவ்வாண்டு இறுதிவாக்கில் கட்டம் கட்டமாக சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிகாமட் நிலையம் இப்போது  தயாராக இருப்பதால்  இடிஎஸ் சேவையை இனி சிகாமட் வரை நீட்டிக்கலாம். ஜொகூர் பாரு நிலையம் இன்னும் பூர்த்தியாகவில்லை. அங்கிருந்து சேவையை இப்போதைக்குத் தொடர முடியாது ”என்றார் அந்தோணி லோக்.

சிகாமட் ஏற்கனவே இருக்கும்  ரயிலைப் பயன்படுத்தும். அதே சமயம்,  முதல் இரண்டு புதிய ரயில்கள் அடுத்த மாதம் சீனாவில் இருந்து மலேசியா வந்தடையும் என்று இங்கு சமூக தலைவர்களுடனான சந்திப்பு மற்றும்  நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடத்தில்  பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ உத்தாமா அமினுடின் ஹருணும் கலந்து கொண்டார்.

“இப்புதிய ரயில்கள் வாயிலாக ஜொகூர் பாருவில் இருந்து கோலாலம்பூருக்கான இடிஎஸ் பயணச் சேவைகள் அதிகரிக்கப்படும். இதன் வழி பயணிகள் அதிக நன்மை அடைவர் “என்றார்.

“ஜொகூர் பாருவில் இருந்து வரும் ரயில்கள் சிரம்பானைக் கடந்து செல்வதால் சிரம்பான் மக்களும் இதன் வழி பயனடைவர்” என்றார் சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினருமான அந்தோணி லோக்.

-சினார் ஹரியான்