Homeஅரசியல்இந்தியர்களின் நலன்களுக்காக குரல் எழுப்புவேன்! -ஜசெகவின் புதிய உதவி தலைவர் அருள்குமார்

இந்தியர்களின் நலன்களுக்காக குரல் எழுப்புவேன்! -ஜசெகவின் புதிய உதவி தலைவர் அருள்குமார்

சிரம்பான், மார்ச் 18-
இந்தியர்களின் கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட பல விவகாரங்களுக்குத் தீர்வு காணும் கடப்பாட்டைத் தாம் கொண்டிருப்பதாக ஜசெகவின் புதிய உதவி தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் அருள்குமார் ஜம்புநாதன் கூறினார்.

“இந்தியர்கள் பல்வேறு பிரச்னைகளை எதிர்நோக்கி வருகின்றனர். இவற்றை ஜசெக தலைமைத்துவத்திடம் கொண்டு சென்று அரசாங்க பிரதிநிதிகள் வாயிலாக உரிய தீர்வு காண முயற்சி மேற்கொள்வேன்” என்றார் நீலாய் சட்டமன்ற உறுப்பினருமான அருள் குமார்.

“இந்திய சமூகத்தினரின் பிரச்னைகள் குறித்து கட்சியின் தலைமைத்துவத்துடன் கலந்தாலோசனை நடத்துவேன். கட்சியில் இருக்கும் அரசாங்க பிரதிநிதிகள் வாயிலாக இவற்றிக்கு சுமூகமான தீர்வு காண முடியும் என்று நம்புகிறேன் “என்றார் அவர்.

“ஜசெக தற்போது அரசாங்கத்தில் ஓர் அங்கமாகத் திகழ்கிறது.அரசாங்கத்தில் இந்தியர்களின் குரல் ஓங்க இக்கட்சியில் இந்தியர்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.

முதன் முறையாக கட்சியின் மத்திய செயற்குழுவிற்குப் போட்டியிட்ட தனக்கு ஆதரவு வழங்கி வெற்றி பெறச் செய்த பேராளர்களுக்கு இவ்வேளையில் நன்றி தெரிவித்துக் கொண்டார் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக்கின் அரசியல் செயலாளருமான அருள் குமார்.

அதே சமயம், தன் மீது நம்பிக்கை வைத்து தன்னை கட்சியின் உதவி தலைவராகத் தேர்ந்தெடுத்த தலைமைச் செயலாளர் அந்தோணி லோக் மற்றும் தலைவர் கோவிந்த் சிங் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

spot_img

latest articles

explore more