சிப்பாங், மார்ச் 18-அவசர நிலை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜாகர்த்தாவில் இருந்து 114 பயணிகளுடன் கோலாலம்பூர் புறப்பட்ட மலேசிய விமான நிறுவனத்தின் எம்எச்720 விமானம் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் பாதுகாப்புடன் இன்று மாலையில் தரையிறங்கியது.
மலேசிய விமான நிறுவனத்தின் எம்எச்720 விமானம் பயணத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் அவசர நிலை ஏற்பட்டிருந்ததை மலேசிய வான் போக்குவரத்து துறை தலைமை செயல்முறை அதிகாரி கேப்டன் டத்தோ நோராஸ்மான் மாமுட் உறுதிப்படுத்தினார்.
“இச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை. பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து வெளியேறிவிட்டனர். இவர்கள் தங்களின் பயணப் பெட்டிகளை எடுத்துக் கொள்ள சிறிது நேரம் பிடித்தது “என்றார்.
பயணத்தைத் தொடர திட்டமிட்டவர்களுக்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகக் கூறிய அவர் இச்சம்பவத்திற்கான காரணத்தை வெளியிடவில்லை.
மாலை மணி 6.02க்கு அவசர அழைப்பு பெறப்பட்டது. சம்பந்தப்பட்ட விமானம் மாலை 6.17க்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் 32 ஆர் தடத்தை வந்தடைந்ததாக அறியப்படுகிறது.


