Homeசமூகம்மஸ்ஜித் இந்தியா பத்ரகாளியம்மன் ஆலயம் சட்ட விரோத கோயில் கிடையாது!  -டத்தோஸ்ரீ சரவணன் 

மஸ்ஜித் இந்தியா பத்ரகாளியம்மன் ஆலயம் சட்ட விரோத கோயில் கிடையாது!  -டத்தோஸ்ரீ சரவணன் 

கோலாலம்பூர், மார்ச் 23-ஜாலான் மஸ்ஜித் இந்தியா அருள்மிகு தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் சட்ட விரோத கோவில் அல்ல என்று  மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் திட்டவட்டமாகக் கூறினார்.

இதன் பொருட்டு இது சட்டவிரோத ஆலயம் என்று   தவறான தகவல்களைப்  பரப்ப வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட தரப்பினரை அவர் கேட்டுக் கொண்டார்.

 இந்த நூற்றாண்டு கால ஆலயம் சட்டப்பூர்வமாகச் செயல்படுகிறது என்பதற்கு நிறைய   ஆதாரங்கள்  உள்ளன.

“இது ஏற்கனவே இங்கே  இருந்த கோயிலாகும். 2008ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட போது மாநகர் மன்றம் குடிநீர் மற்றும் மின்சார விநியோகத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளது. அதற்கான கடிதமும் நம்மிடம் உள்ளது” என்று இங்கு ஆலய வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் விளக்கமளித்தார்.

தொடர்ந்து 2016ம் ஆண்டில் தனியார் நிறுவனத்திடம் இது ஒப்படைக்கப்பட்டது. அப்போது அரசாங்க தலைமைச் செயலாளரின் கீழ்  ஆலயம் வைக்கப்பட்டது என்றார்.

இந்த ஆலயம் இங்கு தொடர்ந்து நிலைத்திருப்பதற்காக மஇகா முன்னாள் தேசிய தலைவர் அமரர் துன் ச. சாமிவேலு கடும் முயற்சிமேற்கொண்டார்.இதற்குத் தானும் டத்தோ பஞ்சமூர்த்தியும் பக்க பலமாக இருந்ததை அவர் சுட்டிக் காட்டினார்.

“கோலாலம்பூர் மாநகர் மன்றம், ஆலய நிலத்தை வாங்கிய நிறுவனம் ஆகியவற்றுக்கு முன்பே செயல்படத் தொடங்கியதுதான் இந்த 130 ஆண்டு பழமை வாய்ந்த அருள்மிகு தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம்”என்றார்   தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணன்.

இந்த ஆலய விவகாரத்திற்கு சுமூகமானது ஒரு தீர்வு காணப்படும் என்று அரசாங்கம் வாக்குறுதி அளித்துள்ளது. நாமும் அதை நம்புவோம் என்றார் அவர்.

“இது சமயம் சார்ந்த விஷயம். ஆகையால் இதனை யாரும் அரசியலாக்க வேண்டாம்” என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இச்செய்தியாளர் சந்திப்பில் மஇகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ். ஏ. விக்னேஸ்வரனும் கலந்து கொண்டார்.

நிலத்தை வாங்கும்போது ஆலயம் இங்கு இருப்பது அந்த நிறுவனம் அறிந்ததுதானே. இதில் அந்நிறுவனம் அக்கறை காட்டாதது ஏன் என்று விக்னேஸ்வரன் வினவினார்.

இதனிடையே, இந்தஆலயம் உடைபடாது என்று கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் தலைவர்  டத்தோஸ்ரீ மைமுனா முகமது ஷரிஃப் அண்மையில் இந்த ஆலயத்திற்கு வருகை மேற்கண்டபோது உறுதியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆலயம் அமைந்துள்ள நிலத்தை வாங்கிய தனியார் நிறுவனம் இங்கு மசூதி கட்டுவதற்குத் திட்டமிட்டுள்ளதாக அறியப்படுகிறது.

spot_img

latest articles

explore more