சென்னை, ஜூன் 3-
தக் லைஃப் பட இசை வெளியீட்டின் போது, கன்னட மொழி தமிழில் இருந்து பிறந்தது என, நடிகர் கமல்ஹாசன் கூறியிருந்தது, சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.
அக்கூற்றுக்காக, நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லையென்றால் படம் கர்நாடகாவில் வெளியிட முடியாது என கர்நாடக திரைப்பட வர்த்தக சபை அறிவித்தது.
அதற்கு அடுத்து கமல்ஹாசன் நீதிமன்றத்தில் வழக்கைத் தொடுத்த நிலையில், அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டுமென கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
தாம் தவறாக கூறிய கூற்றுக்கு வேண்டுமானால் மன்னிப்பு கேட்கலாம். ஆனால், தனது கருத்தைத் தவறாக புரிந்துக்கொண்டதற்காக எல்லாம் மன்னிப்பு கேட்க முடியாது என கமல்ஹாசன் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.
இதற்கடுத்து, தக் லைஃப் பட தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் இன்டர்நேஷனல், கர்நாடகாவில் படம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
ஆக, கர்நாடகாவைத் தவிர, உலகெங்கிலும் வரும் ஜூன் 5ஆம் தேதி, தக் லைஃப் திரைப்படம் வெளியாகவுள்ளது.