கோலாலம்பூர், ஜூன் 26-
சைபர்ஜெயாவில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் பயிலும் 20 வயது மாணவி ஒருவர், நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை காலை அவரது விடுதி அறையில் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சடலம் காணப்பட்ட நிலையில், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
அச்சம்பவம் குறித்து பேசிய செப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டெண்ட் கமிஷனர் நோர்ஹிசாம் பஹாமான் கூறுகையில், சம்பந்தப்பட்ட மாணவி சுயநினைவின்றி கிடந்தது குறித்து அதே நாள் காலை 10.28 மணிக்கு புகார் பெறப்பட்டதாகவும் பின்னர் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் கூறினார்.
“முதற்கட்ட சோதனையில், மாணவியின் வீட்டில் அத்துமீறி நுழைந்ததற்கான தடயங்கள் ஏதும் இல்லை. ஆனால், அவரது தலையில் பலமாக தாக்கியற்கான காயங்கள் இருந்தன,” என்று இன்று வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் அவர் குறிப்பிட்டார்.
மாணவியின் உடல், உடற்கூறு ஆய்வுக்காக செர்டாங் மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
“முதற்கட்ட விசாரணையில், தலையில் கடுமையாக தாக்கப்பட்டதே (blunt force trauma to the head) மரணத்திற்கான காரணம் என தெரியவந்துள்ளது.
ஆயினும், பாலியல் வன்கொடுமைக்கான எந்தவொரு காயங்களும் இல்லை,” என்று அசிஸ்டெண்ட் கமிஷனர் நோர்ஹிசாம் பஹாமான் தெரிவித்தார்.
கொலையை உட்படுத்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302-இன் கீழ், அச்சம்பவம் விசாரிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்தவர்கள், விசாரணை அதிகாரி ஏ.எஸ்.பி. முஹமட் ஹுஸ்னி ஹுஸ்ஸைனை 012-9307860 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவோ அல்லது அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் தகவல் அளிக்கவோ கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், பொதுமக்கள் இச்சம்பவம் தொடர்பாக ஊகங்களை பரப்பவோ அல்லது உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பகிரவோ கூடாது என்றும் போலீஸ் வலியுறுத்தியுள்ளது.


