வடக்கு- தெற்கு நெடுஞ்சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் படையினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்த கொள்ளையர்கள் இருவர் போலீஸாரின் பதில் தாக்குதலில் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

நான்கு சக்கர வாகனத்தில் பயணித்த கொள்ளையர்கள் சந்தேகத்திற்கு இடமாக நடந்து கொண்டதை அடுத்து, அவர்களின் வாகனத்தை நிறுத்தச் சொன்ன போலீஸாரின் உத்தரவைப் பொருட்படுத்தாத அவர்கள் போலீஸாரை நோக்கிச் சுட்டதை அடுத்து, தற்காப்பிற்காக அவர்களை நோக்கி போலீஸார் சுட்டனர்.

இதில் கொள்ளையர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டனர்.

வாகனத்தைச் சோதனை செய்ததில், இரண்டு சுடும் ஆயுதங்கள், சில துப்பாக்கிக் குண்டுகள், ஒரு பாராங் கத்தி மற்றும் சில ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.

41 வயதான அவர்களிருவருக்கும் 40 குற்ற வழக்குகள் இருப்பதாகவும் இவர்கள் நாடு முழுமையும் நடந்த குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் ஒரு கும்பலின் உறுப்பினர்கள் என்றும் நம்பப்படுகிறது.

அந்தக் கும்பல் 2020ஆம் ஆண்டிலிருந்து போதைப்பொருள் கடத்தல், தொழிற்சாலைகளில் அத்துமீறி நுழைந்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக கெடா போலீஸ் தலைவர் ஃபிசோல் சாலே தெரிவித்தார்.

-பொன் முனியாண்டி