Homeமலேசியாநீதித் துறையில் சுதந்திரம் வேண்டும்! நடை பயணம் வழி 400 வழக்கறிஞர்கள் கோரிக்கை 

நீதித் துறையில் சுதந்திரம் வேண்டும்! நடை பயணம் வழி 400 வழக்கறிஞர்கள் கோரிக்கை 

புத்ரா ஜெயா, ஜூலை 14-

இன்று மதியம் புத்ரா ஜெயா நீதித்துறை வளாகத்தில் வழக்கறிஞர் மன்றத்தின் தலைவர் எஸ்ரி அப்துல் வஹாப்பின் தலைமையில், நீதித் துறையில் அரசியல் தலையீட்டை எதிர்த்து நடைபெற்ற நடை பயணத்தில், 400க்கும் அதிகமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நடைபயணத்தில் ஈடுபட்டவர்கள் புத்ரா ஜெயா நீதித்துறை வளாகத்திலிருந்து பிரதமர் அலுவலகத்திற்குச் சென்று ஆட்சேப மனுவைத் தாக்கல் செய்தனர்.

இதில் கலந்து கொண்ட வழக்கறிஞர்கள் அனைவரும் வெள்ளை நிற சட்டைகள் மற்றும் கருப்பு நிற காற்சட்டைகளை அணிந்திருந்தனர்.

இக்கூட்டத்தில் வழக்கறிஞர் மன்றத்தின் முன்னாள் தலைவர்களான அம்பிகா சீனிவாசன், கேரன் சியா ஆகியோரோடு பிகேஆர் துணைத் தலைவர் நூருல் இஸா அன்வார், முன்னாள் சட்டத் துறைத் தலைவர் டோமி தோமஸ்,முன்னாள் மேலவைத் தலைவர் ராயிஸ் யாத்திம், முன்னாள் எம்ஏசிசி தலைவர் லத்தீபா கோயா, சமூக போராட்டவாதி சித்தி காசிம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

வழக்கறிஞர்கள் அனைவரும் சேர்ந்து பிரதமர் அலுவலகத்தில் மகஜர் ஒன்றைச்  சமர்ப்பித்தனர்.

அந்த மகஜரில், நீதித் துறையில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாதென்றும் நீதித் துறை சுதந்திரமாகச் செயல்பட வேண்டுமென்றும் தகுதியான, நேர்மையான நீதிபதிகளையும் நியாயமான தீர்ப்புகளை வழங்கிய நீதிபதிகளையும் மேல்நிலை நீதிபதிகளாக நியமிக்கப்பட வேண்டுமென்றும் நீதித் துறையில் நிலவும் காலியிடப் பதவிகளை விரைவாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

-பொன் முனியாண்டி

 

 

spot_img

latest articles

explore more