புத்ராஜெயா, ஜூலை 14-
பிரதமர் பொறுப்பிலிருந்து டத்தோ ஸ்ரீ அன்வாரை விலகக்கோரி, வரும் ஜூலை 26ஆம் தேதி, பெரிக்காத்தான் நேஷ்னல் கூட்டணி நடத்தவிருக்கும் பேரணியில் 300,000 பேர் திரள்வார்கள் என புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
‘மலேசியாவைக் காப்போம்: தூருன் அன்வார்’ எனும் பெயரிலான அப்பேரணியில் இதற்கு முன்னர், அறிவிக்கப்பட்ட 50,000 பேர் என்ற இலக்கை விட, அது ஆறு மடங்கு அதிகமாகும்.
“கூட்டணி கட்சிகள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட மகத்தான ஆதரவு மற்றும் உறுதியான பதில்களின் அடிப்படையில் இந்த இலக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
எங்கள் கூட்டணி கட்சிகளில் மட்டும் 100,000 பேர் பங்கேற்பார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது,” என பெரிக்காத்தான் நேஷ்னல் கூட்டணியின் இளைஞர் பிரிவு தலைவரும், பாஸ் கட்சி இளைஞர் பிரிவு தலைவருமான ஆஃப்னான் ஹமிமி தயிப் அஸாமுதீன், இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
அரசியல் மற்றும் பொருளாதார சவால்களை மையப்படுத்தி, அப்பேரணி நடைபெற உள்ளது. பொருளாதார நெருக்கடி, தலைமை நீதிபதி நியமனம், நகர்ப்புற புதுப்பித்தல் (யு.ஆர்.ஏ) சட்ட மசோதா திருத்தம் மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் தொடர்பான பிரச்சினைகள் ஆகியவை இதில் முக்கிய விவாதப் பொருள்களாக இருக்கும்.
முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் உள்பட பெரிக்காத்தான் நேஷ்னல் கூட்டணியின் முக்கிய தலைவர்கள் இந்த பேரணியில் பங்கேற்க உள்ளனர், இது இந்த நிகழ்வின் அரசியல் தாக்கத்தை மேலும் அதிகரிக்கிறது.
முன்னர் ஐந்து இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த இந்த பேரணி, தற்போது கோலாலம்பூரில் உள்ள சோகோ, மஸ்ஜித் ஜாமேக், மஸ்ஜித் நெகாரா மற்றும் பசார் செனி ஆகிய நான்கு முக்கிய இடங்களில் நடைபெறும் என ஆஃப்னான் அறிவித்தார்.
பேரணியில் பங்கேற்போர் ஒற்றுமையைக் குறிக்கும் வகையில் கருப்பு நிற ஆடைகளை அணியுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
பேரணியின் அமைதி மற்றும் ஒழுங்கை உறுதி செய்ய, தங்கள் தரப்பு டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைமையகத்துடன் முழுமையாக ஒத்துழைத்து வருவதாக ஆஃப்னான் தெரிவித்தார்.
“பங்கேற்பாளர்கள் எவ்வித ஆத்திரமூட்டல் செயல்களிலும் ஈடுபடாமல், பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்காமல் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த பேரணி முற்றிலும் அமைதியான முறையில் நடைபெறும்.”
“எவரேனும் ஆத்திரமூட்டல் அல்லது குழப்பத்தை ஏற்படுத்த முயன்றால், அவர்கள் உண்மையான பங்கேற்பாளர்கள் அல்ல, வெளி அமைப்புகளால் அனுப்பப்பட்டவர்கள் என கருதப்படுவார்கள். எங்கள் பாதுகாப்பு குழு, போலீசுடன் இணைந்து, சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கும்,” என்று ஆஃப்னான் எச்சரித்தார்.


