கோலாலம்பூர், ஜூலை 21-
இம்மாதம் 26ஆம் தேதி பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் ஏற்பாட்டில் நடைபெறும் பேரணி வழி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை பதவியிலிருந்து அகற்ற முடியாது என்று மூத்த பத்திரிகையாளர் காடிர் ஜாசின் உறுதியாகக் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் மூலமாக அல்லது நாடாளுமன்றத்தில் எம்பிக்களின் ஆதரவு குறைந்தால் மட்டுமே அவரைப் பதவியிலிருந்து அகற்றும் சாத்தியம் உள்ளது.
ஆகையால், பேரணியின் மூலம் அவரை அகற்றுவது முடியாத காரியம் என்று அவர் தெரிவித்தார்.
‘தூருன் அன்வார்’ எனும் எதிர்க்கட்சிகளின் சுலோகமானது 2028 பிப்ரவரி 17ஆம் தேதிக்கு முன்னதாக நடத்தப்பட வேண்டிய, பொதுத்தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக இருக்குமே ஒழிய, இப்போதைக்கு சாதிக்கக் கூடியது எதுவுமே இல்லையென்று காடிர் ஜாசின் சுட்டிக் காட்டியுள்ளார்.
-பொன் முனியாண்டி


