கோலாலம்பூர், ஆக. 2-
நாட்டை ஆட்சி செய்யும் மடானி அரசுக்கு இன்னும் 2 ஆண்டு காலம் எஞ்சி இருக்கும் நிலையில், ஆட்சியைக் கலைத்து பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்ற துன் மகாதீரின் கூற்று நகைப்புக்குரியதாகப் பேசப்படுகிறது.
தேர்தல் நடந்தால், எதிர்க்கட்சியின் சார்பில் யார் பிரதமர் வேட்பாளராக நியமிக்கப்படுவார் என்ற சிக்கல் பெர்சத்து மற்றும் பாஸ் கட்சியினரிடையே பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.
இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட காலம் அவகாசம் தேவைப்படும்.
மேலும், தற்போது நாடாளுமன்ற நடவடிக்கைகளில் எதிர்க்கட்சிகள் மெத்தனமாகச் செயல்படுவதால் மக்களின் ஆதரவை முழுமையாக அவை பெறத் தவறியிருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
பாஸ் கட்சியின் வசமிருக்கும் கிளந்தான், திரெங்கானு, கெடா, பெர்லிஸ் ஆகிய மாநிலங்களில் ஆட்சி சொல்லும்படியான வகையில் இல்லையென்று பரவலான கருத்தும் நிலவுகிறது.
ஆகையால் , இம்மாதிரியான சிக்கலும் பிரச்சினைகளும் சூழ்ந்துள்ள நிலையில், அதிரடியாகப் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டால் எதிர்க்கட்சிகள் மண்ணைக் கவ்வுவது உறுதி என்றும் ஆரூடம் கூறப்படுகிறது.
-பொன் முனியாண்டி


