கோலாலம்பூர், ஆக.3-

மடானி அரசாங்கத்தில் மேற் கொள்ளப்படும் ஊழலை ஒழிக்கும் நடவடிக்கைகள் இன்னும் தீவிரமாகவும் யாருக்கும் பாரபட்சம் காட்டாமலும் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் கிள்ளான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ வலியுறுத்தியுள்ளார்.

அண்மையில் சட்டத்திற்குப் புறம்பாகச் சேர்க்கப்பட்ட பணத்தை துன் மகாதீரின் புதல்வர்கள் அரசுக்குத் திருப்பித்தர வேண்டுமென்று அரசாங்கம் வலியுறுத்திய காரணத்தினால்தான் ‘அன்வார் பதவி விலக வேண்டுமென்ற பேரணி’ நடத்தப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அவர் கூறினார்.

கடந்தாண்டு இங்கிலாந்து நாட்டில் முறையான காரணம் காட்டப்படாமல் சேர்க்கப்பட்ட பணம் 61.9 மில்லியன் பவுண்டை பறிமுதல் செய்யப்பட்ட சம்பவமானது அங்கு ஊழலை ஒழிக்க மேற்கொள்ளப்பட்ட கடுமையான நடவடிக்கை என்று சார்ல்ஸ் சந்தியாகோ குறிப்பிட்டார்.

கடந்த ஐந்தாண்டுகளில் மலேசியா 277 பில்லியன் (27,700 கோடி) ரிங்கிட்டை ஊழலின் மூலம் இழந்துள்ளது. ஆக, ஆண்டுக்கு 5,500 கோடி ரிங்கிட் ஊழலின் மூலமும் தப்பான கொள்முதல், அதிகாரத் துஷ்பிரயோகத்தின் மூலமும் கொள்ளையடிக்கப் பட்டுள்ளது.

இந்தப் பணமானது கூடுதல் பள்ளிகள், மருத்துவமனைகள் கட்டவும், உணவுக்கான உதவித் தொகையை வழங்கவும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

பொதுமக்கள் தங்களின் எல்லா வருமானத்திற்கும் கணக்குக் காட்டப்பட வலியுறுத்தப்படும் வேளையில், கோடிக் கணக்கான மதிப்பிலான மாட மாளிகைகளைக் கட்டி, சொகுசு வாழ்க்கையை வாழ்வோருக்கும் அதே நடைமுறையை அரசு விதிக்க வேண்டும் என்றார் அவர்.

நாட்டு மக்கள் அனைவரும் தங்களின் உண்மையான வருவாயைப் பெற்று வரும் மூலத்தை அறிவிக்க கடுமையான சட்டங்களை அரசு இயற்ற வேண்டுமென்று சார்ல்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

-பொன் முனியாண்டி