கோலாலம்பூர் ஆக 3- இந்நாட்டிலுள்ள இந்தியர்கள் தங்கள் வாழ்வில் மேன்மையடைய இந்திய சமூக பொருளாதார உருமாற்று பிரிவு( மித்ரா) மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்று பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா கேட்டுக் கொண்டார்.

இதன் அடிப்படையில் மித்ராவின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் 100 மில்லியன் வெள்ளி நிதி தேவையானவர்களுக்கு தக்க சமயத்தில் உதவி செய்யக்கூடிய வகையில் இருக்க வேண்டும் என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

இந்த ஒதுக்கீட்டில் 60 விழுக்காடு இச்சாராரின் கல்வி , பொருளாதாரம், வீட்டுடமை, வர்த்தகம் போன்ற துறைகளுக்கு அவசியம் வழங்கப்பட வேண்டும் என்றார்.

அதே வேளையில், உயர்கல்வி கூடங்களில் பயிலும் மாணவர்கள் குறிப்பாக பொருளாதார சிக்கலை எதிர்நோக்கும் மாணவர்களுக்கு மித்ரா உதவ வேண்டும் என்றார் அவர்.

தொடர்ந்து, இயக்கங்கள் மற்றும் வியாபாரம் செய்யும் இந்தியர்களுக்கு மித்ரா உதவ வேண்டும் என்று பிபிபி கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்திற்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார்.

தவிர, சமூக திட்டங்களை மேற்கொள்ளும் அரசு சார்பற்ற அமைப்புகளின் நடவடிக்கைகளுக்கும் மித்ரா கைகொடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் லோகபாலா முன் வைத்தார்.