வெள்ளிக்கிழமை, டிசம்பர் 6, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > இந்திய முஸ்லிம்களுக்கான பூமிபுத்ரா அந்தஸ்து குறித்து அரசாங்கம் ஆய்வு! -பிரதமர் நஜீப் தகவல்
முதன்மைச் செய்திகள்

இந்திய முஸ்லிம்களுக்கான பூமிபுத்ரா அந்தஸ்து குறித்து அரசாங்கம் ஆய்வு! -பிரதமர் நஜீப் தகவல்


கோலாலம்பூர், ஜூலை 19-

இந்நாட்டிலுள்ள இந்திய முஸ்லிம்களின் நீண்டகால கோரிக்கையான பூமிபுத்ரா அந்தஸ்து வழங்குவது குறித்து ஆராய அரசாங்கம் தயாராக உள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தெரிவித்தார்.

நாட்டின் வளர்ச்சிக்கு இந்திய முஸ்லிம்கள் பெரும் பங்காற்றியிருப்பதாக கூறிய அவர், அச்சமூகத்தினரின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவி சாய்த்து வருவதாக கூறினார்.

இந்திய முஸ்லிம் சமூகத்தினரின் கோரிக்கைகளை நான் செவிமடுக்கிறேன். அவர்களை பூமிபுத்ராக்களுக்களாக ஏற்றுக்கொள்கிறேன்.

இப்போதைய கேள்வி என்னவென்றால் அதனை எவ்வாறு அமல்படுத்துவதாகும். நிர்வாகம் அல்லது அரசாங்க பிரகடனம் வாயிலாக இதனை அமல்படுத்துவது குறித்து முழுமையான ஆய்வை மேற்கொள்வோம் என நேற்று செர்டாங்கிலுள்ள மேப்ஸ் மண்டபத்தில் இந்திய முஸ்லிம் இயக்கங்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு மற்றும் குடும்ப தின விழாவில் உரையாற்றிய டத்தோஸ்ரீ நஜீப் குறிப்பிட்டார்.

தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு இந்திய முஸ்லிம் சமூகத்தினர் எப்போதும் வலுவான ஆதரவை வழங்கி வருகின்றனர். அது வருகின்ற 14ஆவது பொதுத்தேர்தல் வரை தொடரப்பட வேண்டும்.

அச்சமூகத்தைச் சேர்ந்த இளம் தலைமுறையினர் தங்களின் பாரம்பரிய துறைகளிலிருந்து நிபுணத்துவ துறைகளில் அதிகமாக கால் பதித்து விட்டதாகவும் பலர் கணக்காய்வாளர், வழக்கறிஞர் முதலான தொழில்களில் ஈடுபட்டு வருவதாகவும் என்னிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு
மாற்றங்களை இந்த சமூகம் கண்டிருந்தாலும் அரசாங்கத்தின் மீதான அவர்களின் ஆதரவில் மாற்றமில்லை.

பிரேஸ்மா சங்கத்திலுள்ள உணவகங்களில் உடல்பேறு குறைந்தவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், உள்நாட்டு வாணிபம், கூட்டுறவு, பயனீட்டாளர் துறை அமைச்சின் பயனீட்டாளர் அட்டையை வைத்திருப்பவர்களுக்கு சதவிகித அடிப்படையில் சிறப்பு கழிவுகளை வழங்க பிரேஸ்மா முன்வந்துள்ளது. இது பாராடுக்குரியது. மலேசியர்களுக்கான அவர்களின் இந்த சேவை தொடரப்பட வேண்டுமென பிரதமர் நஜீப் கேட்டுக்கொண்டார்.

இந்திய முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் சங்கம் (பிரேஸ்மா) இந்திய முஸ்லிம் இயக்கங்களின் சம்மேளனத்துடன் (பெர்மிம்) இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில் உள்நாட்டு வாணிபம், கூட்டுறவு மற்றும் பயனீட்டாளர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின், அம்னோவின் உச்சமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அப்துல் அசீஸ் அப்துல் ரஹிம் உட்பட சுமார் 15,000க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன