செராஸ், ஆக.3O-

இந்தியர் சமூக உருமாற்று பிரிவின் (மித்ரா) சினார் சஹாயா திட்டத்தின் வழி பலாக்கோங் வாழ் இந்தியர்கள் தற்போது பயனடையத் தொடங்கியிருப்பது குறித்து இத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வேய்ன் ஓங் சுன் வேய் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இங்குள்ள தனது சேவை மையத்தை நாடி வரும் இவ்வட்டார இந்தியர்களுக்கு மித்ரா சினார் சஹாயா திட்டத்தின் கீழ் பல்வேறு உதவி திட்டங்களுக்கு மனு செய்வதற்குத் தனது அலுவலகத்தினர் உதவி புரிந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இப்பட்டியலில் பேறு குறைந்தோர் , கர்ப்பிணி பெண்கள், புற்றுநோயாளிகள், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட பல்வேறு நோய்களினால் அவதியுற்று வருவோரும் அடங்குவர் என்றார்.

அவ்வகையில் சுமார் இரு மாதங்களுக்கு முன்பு மித்ரா சினார் சஹாயா திட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்தவர்களில் ஒரு சிலருக்கு இப்போது உதவி நிதி கிடைத்துள்ளது.

இதன் வழி இவர்களின் சுமை ஓரளவு குறைந்திருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தியர்களின் சிரமங்களைப் போக்குவதற்காக மித்ரா வழி சிறப்பு நிதியை ஒதுக்கீடு செய்திருக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம் மற்றும் மித்ரா தலைவர் பி.பிரபாகரன் ஆகியோருக்கு வேய்ன் ஓங் இவ்வேளையில் தனது நன்றியைப் புலப்படுத்தினார்.