செபராங் ஜெயா:
தமிழ் மொழி என்பது வெறும் தொடர்பு சாதனம் அல்ல, அது ஓர் இனத்தின் அடையாளமும் உயிரும் என தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் ம.இ.கா தேசிய துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் வலியுறுத்தினார்.
பினாங்கு தமிழ் எழுத்தாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த ‘பாவேந்தர் பாரதிதாசன் விழா’வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய அவர், பாரதிதாசன் தமிழ்ப்பற்று, பெண் விடுதலை மற்றும் சமூக சீர்திருத்த சிந்தனைகளை உலகத் தமிழர்களிடம் விதைத்த புரட்சிக்கவிஞர் எனப் பாராட்டினார்.
விழாவிற்கு தலைமை தாங்கிய சங்கத் தலைவர் செ.குணாளன், பாரதிதாசனின் கவிதைகள் சாதி ஒழிப்பு, பகுத்தறிவு, பெண்ணுரிமை மற்றும் தமிழ் மொழிப்பற்றை வலியுறுத்திய சமூகப் புரட்சிக் குரலாக அமைந்ததாகக் குறிப்பிட்டார். தமிழ் இலக்கியங்களை இளைய தலைமுறையின் வாழ்வியல் வழிகாட்டியாக மாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பெண் கல்வியின் அவசியத்தை எடுத்துரைத்த டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன், “ஒரு பெண்ணுக்குக் கல்வி அளிப்பது என்பது ஒரு தலைமுறைக்கே அறிவை வழங்குவதாகும்” என்று கூறி, பெண்களின் முன்னேற்றமே சமூக வளர்ச்சிக்கான அடித்தளம் எனத் தெரிவித்தார்.
விழாவில் நடைபெற்ற கவிதை மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற 20 மாணவர்களுக்கு ரொக்கம், நினைவு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், ஜெயசந்திரமோகன் என்ற ஜெயலட்சுமிக்கு “இலக்கிய செம்மல்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
கவிக்குமார் தலைமையில் நடைபெற்ற சிலம்பக் கண்காட்சியும் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. இவ்விழாவில் டத்தோஸ்ரீ கா.புலவேந்திரன், டத்தோ மரியதாஸ் கோபால், ச.குமரேசன், மா.முனியாண்டி, சண்முகராசு, டத்தோ ஜெ.தினகரன் மற்றும் க.உதயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

