கோலாலம்பூர்:
உங்களால் என்ன செய்ய முடியும். உங்களின் ஆற்றல் என்ன என்பன போன்ற விஷயங்களை ஆராய்ந்து ஈடுபடும் தொழிலே வெற்றியைத் தரும் என்று ஆணித்தரமாகக் கூறுகிறார் எவரெஸ்ட் குழுமத்தின் தோற்றுநர் டத்தோ ஸ்ரீ டாக்டர் முனியாண்டி @ஆண்டி ஹரிகிரிஷ்ணசாமி.
தவறான வியாபாரத்தில் ஈடுபட்டால் தோல்வியே மிஞ்சும். ஆகையால், நம்மை நாம் முதலில் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.பின்னர் பொருத்தமான தொழிலில் ஈடுபட வேண்டும். அப்போதுதான் எதிர்பார்த்த வருமானத்தை ஈட்ட முடியும் என்கிறார்.
நாட்டின் பிரசித்தி பெற்ற ஒய்டிஎல், கெந்திங், பெர்ஜெயா, எவர்செண்டாய் போன்ற நிறுவனங்களை எடுத்துக் கொண்டால் இந்நிறுவனங்கள் தத்தம் துறைகளில் மட்டுமே கவனம் செலுத்தி அதிக லாபம் சம்பாதித்து வருவதைப் பார்க்கலாம். காரணம், அவரவருக்குத் தெரிந்த துறையில் வர்த்தகம் புரிகின்றனர்.
இதுபோன்றே ஒருவருக்குள் இருக்கும் சக்தி, வேகம் அவரவருக்கேத் தெரிவதில்லை. இதுபோன்றவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து இவர்களுக்குரிய துறையை அடையாளம் காணச் செய்து பொருளாதாரத்தில் உயர்நிலையை எட்டச் செய்வதே தற்போதைய தனது தலையாய இலக்கு என்றார்.
இதற்காக கெடா தொடங்கி சிங்கப்பூர் வரை பிஎஸ்என் எனப்படும் வர்த்தக பரிமாற்ற தொடர்பு குழுக்களை தாம் உருவாக்கி இருப்பதாகவும் இவற்றின் வழி 1,000திற்கு மேற்பட்ட தொழில் முனைவர்கள் உருவாகி இருப்பதாகவும் சிறந்த பொருளாதார வல்லுநரான இவர் சுட்டிக் காட்டினார்.
எண்ணெய், எரிவாயு தொடங்கி நகை வியாபாரம், மருத்துவம், வழக்கறிஞர் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியர்கள் வெற்றிநடை போட்டு வருவதாக அநேகன் ஊடக நேர்காணலில் விவரித்தார்.
சம்பளம் என்பது வரையறுக்கப்பட்ட தொகை. இதனைக் கொண்டு ஒரு குடும்பத்தின் தேவையை நிச்சயம் நிறைவேற்ற முடியாது. ஆகையால், ஒரு வீட்டில் ஒரு தொழிலதிபர் அவசியம் இருக்க வேண்டும். அவரவர் தேவையையும் குடும்பத்தின் தேவையையும் இதன் வழி நிறைவேற்றிக் கொள்ளலாம்.
இதன் பொருட்டு இந்திய வர்த்தகர்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு நாம் அவசியம் ஆதரவளிக்க வேண்டும். அப்போதுதான் நம்மிடையே பணப் புழக்கம்
அதிகரிக்கும். உள்நாட்டு வருமான விகிதத்தில் நமது பங்களிப்பு அதிகரிக்கும்போது அரசாங்கத்தில் நமது உரிமையை உரக்கத் தட்டிக் கேட்கலாம் என்றார்.
பொருளாதாரத்தில் நாம் உயரும்போது தலைநிமிர்ந்த சமூகமாக நாட்டில் மட்டுமல்லாது உலகளவிலும் நாம் கம்பீர நடை போடலாம்.
ஆனால், இந்திய வர்த்தகர்கள் பொருட்களின் விலையை அளவுக்கதிகமாக உயர்த்தக் கூடாது.இப்படிச் செய்தால் கடையை மூடும் நிலைதான் மிஞ்சும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
“நம்மை நாமே காப்பாற்றிக் கொள்வோம்” என்ற கோட்பாட்டோடு இந்திய சமூகத்தினரின் பொருளாதார மேன்மைக்கு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்து வருகிறார் எவரெஸ்ட் குழும நிர்வாக இயக்குநருமான இவர்.


