Homeஉலகம்மைக்ரோசாப்ட் சேவைகள் மீண்டும் வழக்கநிலைக்குத் திரும்பின

மைக்ரோசாப்ட் சேவைகள் மீண்டும் வழக்கநிலைக்குத் திரும்பின

வாஷிங்டன்:

உலகம் முழுவதும் பொதுச் சேவைகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளைப் பெரிதும் பாதித்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உலகளாவிய தொழில்நுட்பக் கோளாறு முடிவுக்கு வந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சேவைகள் மீண்டும் வழக்கநிலைக்குத் திரும்பியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

“சேவை முடக்கத்துக்குக் காரணமான அடிப்படைப் பிரச்சினையைச் சரிசெய்யும் பணிகளை நிறைவு செய்துள்ளோம். இதனால், பாதிக்கப்பட்டிருந்த எஞ்சிய வாடிக்கையாளர்கள் மற்றும் பிராந்தியங்களுக்கும் சேவைகள் மீண்டும் வழங்கப்பட்டுள்ளன” என்று அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது எக்ஸ் (X) தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

இதற்கு முந்தைய நாளே, அவுட்லுக் (Outlook) மின்னஞ்சல் உள்ளிட்ட தனது சேவைகள் பெரும்பாலும் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக மைக்ரோசாப்ட் அறிவித்திருந்தது. இந்தப் பாதிப்பு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்டதாகவும், இணையவழித் தாக்குதல் அல்லது செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த முகவர்களுடன் இதற்குத் தொடர்பில்லை என்றும் நிறுவனம் விளக்கமளித்திருந்தது.

கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட இந்தச் சேவை முடக்கம், அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளில் குறைந்தது 74 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் மைக்ரோசாப்ட் சேவைகளைப் பாதித்தது. இதனை இணையச் சேவை முடக்கங்களைக் கண்காணிக்கும் டவுன்டிடெக்டர் (Downdetector) இணையத்தளம் உறுதிப்படுத்தியுள்ளது.

தனது தொழில்நுட்பக் கட்டமைப்பில் ஏற்பட்ட அதிகப்படியான பயன்பாட்டுச் சுமையே (Elevated Load) இந்தச் சேவை முடக்கத்திற்குக் காரணம் என்று மைக்ரோசாப்ட் தெரிவித்திருந்தது.

இந்தப் பாதிப்பால் அவுட்லுக் மின்னஞ்சல் சேவை, மைக்ரோசாப்ட் டீம்ஸ் (Microsoft Teams) தகவல் தொடர்புத் தளம் மற்றும் கோபைலட் (Copilot) செயற்கை நுண்ணறிவு உதவியாளர் ஆகியவற்றின் செயல்பாடுகள் முடங்கின.

இதற்கிடையில், இந்தச் சேவை முடக்கத்தைப் பயன்படுத்தி பயனர்களை ஏமாற்றும் நோக்கில் போலி மின்னஞ்சல்கள் அனுப்பப்படும் இணையவழி மோசடி முயற்சி தீவிரமடைந்துள்ளதாக மைக்ரோசாப்ட் நேற்று எச்சரித்துள்ளது.

வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்ட இந்த மோசடி மின்னஞ்சல்கள், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சேவை அறிவிப்புகளைப் போன்று போலியாக உருவாக்கப்பட்டிருந்தன. சேவை முடக்கத்தின்போது தடுக்கப்பட்ட மின்னஞ்சல்கள், அவற்றை மீட்டெடுப்பதற்காக வழங்கப்பட்டுள்ள இணைப்பைச் சொடுக்காவிட்டால் நீக்கப்பட்டுவிடும் என்று அவற்றில் பயனர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இத்தகைய போலி மின்னஞ்சல்களின் இணைப்புகளைச் சொடுக்க வேண்டாம் என்றும் பயனர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

spot_img

latest articles

explore more