கோலாலம்பூர், நவ. 7-
அண்மையில் ஏற்பட்ட விபத்தில் தனது தோள்பட்டையில் காயத்திற்கு இலக்கான பி.கே.ஆர். கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக நாளை கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் அனுமதிக்கப்படவுள்ளார். அவருக்கு வருகின்ற 12ஆம் தேதி இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்வார் இப்ராஹிமிற்கு மூட்டு பகுதியில் அர்த்தோஸ்கோபிக் என கூறப்படும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த சிகிச்சையை கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையின் மருத்துவர்கள் நிபுணத்துவ அடிப்படையில் சிறப்பாக மேற்கொள்வார்கள் என நாங்கள் நம்புவதாக அன்வாரின் குடும்பம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. அன்வார் இப்போது இருக்கும் சூழ்நிலையில் ஆபத்து நிறைந்த இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதால் அவரது உடல் நிலைமை மற்றும் பாதுகாப்பு குறித்து நாங்கள் கவலையடைந்திருக்கிறோம் என அவர் தெரிவித்துள்ளனர்.

கடந்த அக்டோபர் மாதம் 31ஆம் தேதி அன்வாரும் அவரது குடும்பத்தினரும் இந்த அறுவை சிகிச்சை தொடர்பில் கோலாலாம்பூர் பெரிய மருத்துவமனையின் மருத்துவரை சந்தித்துள்ளனர். மருத்துவருடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த அறுவை சிகிச்சையை மேற்கொள்ள அன்வார் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது. அரசாங்கத்தின் எவ்வித தலையீடல்களும் இன்றி அவரது அறுவை சிகிச்சைக்கான அனைத்து மருத்துவ தேவைகளும் வழங்கப்படும் என மத்திய அரசாங்கம் உறுதியளிக்க வேண்டுமென அன்வாரின் குடும்பம் கோரிக்கை விடுத்துள்ளது.

அறுவை சிகிச்சைக்கு பிறகு அவர் முற்றிலும் குணமடைவதற்கான உடல் பராமரிப்பு வசதிகள் சுங்கை பூலோ மருத்துவமனையில் குறைவாக உள்ளது. ஆகையால், அவர் குணமடையும் வரையில் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் இருப்பதற்கு அனுமதியளிக்கப்பட வேண்டும். இந்த அறுவை சிகிச்சையின் போதும் அதற்கு பின்னர் அவர் குணமடையும் வரையில் மனித உரிமை அமைப்புகள் அவரை கண்காணிப்பதற்கு அனுமதியளிக்கப்பட வேண்டுமென அன்வாரின் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டனர்.