கோலாலம்பூர், நவ. 7-
கெடா, பினாங்கு, பேராக் ஆகிய மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் எஸ்பிஎம் மாணவர்களுக்கு உதவிகளை வழங்கிய அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களுக்குக் கல்வி துணையமைச்சர் டத்தோ ப. கமலநாதன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். ரேலா, அரச மலேசிய ஆயுதப்படை, பொதுத் தற்காப்புப் படை, தீயணைப்பு மீட்புப் படை, தேசிய பேரிடர் நிர்வாக நிறுவனம் என பல்வேறு தரப்பினர் அவர்களுக்கு உதவிகளை வழங்கியதை அவர் சுட்டிக் காட்டினார்.

பினாங்கில் வெள்ளம் காரணமாக இரு தேர்வு மையங்கள் இடம் மாற்றப்பட்டன. எனினும், அம்மாநிலத்தில் எஸ்பிஎம் தேர்வு நிர்ணயிக்கப்பட்ட விதிமுறையின்படி நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார். மாக் மண்டின் தேசிய இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த 100 மாணவர்கள், செபெராங் பெராய் இடைநிலைப் பள்ளியில் தேர்வை எழுதினர். ஜிட் சின் தேசிய சீன இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த 400 மாணவர்கள் ஜிட் சின் தனியார் இடைநிலைப் பள்ளிக்கு மாற்றப் பட்டனர்.

துயர் துடைப்பு மையங்களில் தங்கியிருக்கும் மாணவர்கள், போலீஸ், ரேலா, தீயணைப்பு மீட்புப் படையினர் ஆகியோரின் உதவியுடன் தேர்வு மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். வெள்ளப் பேரிடருக்கு மத்தியில், பினாங்கு மாநிலத்தில் நடைபெற்று வரும் தேர்வு நடவடிக்கைகளை மாநில கல்வித் துறை அதிகாரியைத் தொடர்பு கொண்டு தாம் கண்டறிந்து வருவதாகக் கமலநாதன் தெரிவித்தார். மற்றுமொரு நிலவரத்தில், அடிப்படை தொழில் பயிற்சித் திட்டம் PAV-யை செயல்படுத்த 296 -தேசிய இடை நிலைப்பள்ளிகள் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதாக கமலநாதன் தெரிவித்தார். போட்டியாற்றலும், உயர்திறனும் பெற்ற ஆள்பலத்தை உருவாக்கும் அரசாங்க முயற்சிகளின் ஒரு பகுதியாக இது விளங்குகிறது என்றாரவர்.

உயர் நிலை சிந்தனை திறன் கூறுகளும் வியூகத் திட்டங்களில் அடங்கும் என அவர் குறிப்பிட்டார். கல்வியமைச்சு, புத்தாக்கம் மற்றும் தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட பாடங்களை இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார். நுட்பத் தொடர்பு வரைகலை, வடிவமைப்பு, கணினி அறிவியல் உள்ளிட்ட பாடங்களையும் மாணவர்கள் பயில முடியும் என்றாரவர்.