மாஸ்கோ, நவ.15 –
அனைத்துலக நட்புமுறை கால்பந்து ஆட்டத்தில் 2010 உலகக் கிண்ண வெற்றியாளரான ஸ்பெயின் 3 – 3 என்ற கோல்களில் ரஷ்யாவுடன் சமநிலைக் கண்டது.
2018 ஆம் ஆண்டில் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டி ரஷ்யாவில் நடைபெறவுள்ள வேளையில், ஸ்பெயினுடனான ஆட்டம் , செயின் பீட்டர்ஸ்பெர்க் அரங்கில் நடைபெற்றது. பார்சிலோனாவின் ஜோர்டி அல்பா போட்ட கோலின் மூலம் ஸ்பெயின் 1 – 0 என்ற கோலில் முன்னணிக்கு சென்றது.
ரியல் மெட்ரிட் தற்காப்பு ஆட்டக்காரர் செர்ஜியோ ராமோஸ் பினால்டியின் மூலம் இரண்டாவது கோலைப் போட்டார். எனினும் பெடோர் ஸ்மோலோவ், அலெக்சே மிரான்சூக் போட்ட கோல்களின் வழி ரஷ்யா ஆட்டத்தை சமப்படுத்தியது.
இரண்டாம் பாதியில் மீண்டும் பினால்டியின் வழி செர்ஜியோ ராமோஸ் போட்ட கோலினால் ஸ்பெயின் 3 – 2 என்ற கோல்களில் முன்னணிக்கு சென்றது. எனினும் ஸ்மோலோவ் போட்ட கோல், ரஷ்யாவின் சமநிலை முடிவுக்கு வித்திட்டது.