சூரிக், நவ.23-
ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியின் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெறும் தனது கனவை மென்செஸ்டர் யுனைடெட் தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளது.
புதன்கிழமை நடைபெற்ற ஏ பிரிவுக்கான ஐந்தாவது ஆட்டத்தில் எப்.சி பேசல் கிளப்பை வீழ்த்துவது அல்லது சமநிலைக் காண்பதன் மூலம் இரண்டாம் சுற்றில் கால் பதிக்க மென்செஸ்டர் யுனைடெட் திட்டமிட்டிருந்தது.எனினும் 1- 0 என்ற கோலில் தோல்வி கண்டதை அடுத்து மென்செஸ்டர் யுனைடெட்டின் கனவு ஈடேறவில்லை.

ஆட்டம் முடிவடைய ஒரு நிமிடம் எஞ்சியிருந்தபோது மைக்கல் லாங் போட்ட கோல், மென்செஸ்டர் யுனைடெட்டின் தோல்விக்கு வித்திட்டது. இந்த பருவத்தில் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் நடைபெற்ற முதல் நான்கு ஆட்டங்களில் மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி பெற்றிருந்தது.எனினும் எப்.சி பேசலுக்கு எதிரான தோல்வியால் மென்செஸ்டர் யுனைடெட் தனது 100 விழுக்காடு வெற்றியை இழந்துள்ளது.

டிசம்பர் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள குழுப் பிரிவுக்கான இறுதி ஆட்டத்தில் ரஷ்யாவின் சி.எஸ்.கே மாஸ்கோ அணியை வீழ்த்தினால் மட்டுமே மென்செஸ்டர் யுனைடெட் ஏ பிரிவில் முதலிடத்தைப் பிடித்து இரண்டாவது சுற்றில் கால் பதிக்க முடியும்.


