Homeமலேசியாமனிதவள அமைச்சராக 100 நாட்கள்: நீண்டகால தீர்வுகளில் டத்தோஶ்ரீ ரமணன் கவனம்

மனிதவள அமைச்சராக 100 நாட்கள்: நீண்டகால தீர்வுகளில் டத்தோஶ்ரீ ரமணன் கவனம்

கோலாலம்பூர்:

மனிதவள அமைச்சு, சிங்கப்பூரில் பணிபுரிந்து வரும் மலேசியர்களுக்காக பெர்கேசோவின் கீழ் ‘பயணிகள் திட்டத்தை’ (Skim Pengembara) அறிமுகப்படுத்துவதற்கான முன்மொழிவை அமைச்சரவையில் சமர்ப்பிக்கும் இறுதி கட்டத்தில் உள்ளது.

இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டால், வேலை நிமித்தமாக தினசரி சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொள்ளும் சுமார் 400,000-க்கும் மேற்பட்ட மலேசியர்களுக்கு முறையான சமூகப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

இதுமட்டுமின்றி, நாட்டின் சமூகப் பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்தும் தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியாக, பிரசவிக்கும் தாய்மார்களுக்கும் சமூகப் பாதுகாப்பை விரிவுபடுத்துவது குறித்த ஆய்வும் தற்போது இறுதி நிலையை எட்டியுள்ளதாக அவர் கூறினார்.

மனிதவள அமைச்சராகப் பொறுப்பேற்று 100 நாட்களை நிறைவு செய்துள்ள ரமணன், அமைச்சின் செயல்பாடுகள் குறித்து இன்று வெளியிட்ட அறிக்கையில், ஒவ்வொரு கொள்கையும் மக்களுக்கு நேரடி நன்மைகளைத் தருவதை உறுதி செய்வதே மனிதவள அமைச்சின் முதன்மை நோக்கம் என்று குறிப்பிட்டார்.

குறிப்பாக சமூகப் பாதுகாப்பு, திறன் மேம்பாடு மற்றும் தொழிலாளர் நலன் ஆகிய துறைகளில் நிலையான மாற்றங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

“இந்தக் குறுகிய காலத்தில், தற்காலிக தீர்வுகளைத் தேடாமல், நீண்டகால அடிப்படையில் அமைந்த விரிவான முன்னெடுப்புகளுக்கு நாங்கள் முன்னுரிமை அளித்துள்ளோம்,” என்று சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கூறினார்.

சுற்றுலாத் துறையைப் பொறுத்தமட்டில், ‘மலேசியாவிற்கு வருகை தரும் ஆண்டு 2026’ முன்னிட்டு, அத்துறையில் உள்ள 10,000 தொழிலாளர்களுக்கு இலவச தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பயிற்சியை வழங்க அமைச்சு முன்முயற்சி எடுத்துள்ளது.

முன்னாள் பாதுகாப்புப் படை வீரர்களின் நலனைப் பாதுகாக்கும் நோக்கில், பெர்கேசோ, பெர்ஹேபாட் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் விவகாரத் துறை ஆகியவற்றுடன் இணைந்து ஒரு ஒருங்கிணைந்த சூழலை உருவாக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

இதன் மூலம், வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் 5,000 முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ‘LINDUNG Kerjaya MYFutureJobs Wira’ திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்புகளை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

திறன் மேம்பாட்டுத் துறையில், மனிதவளத் துறை (JTM) மற்றும் ADTEC வாயிலாக மேற்கொள்ளப்படும் மறுதிறன் (Reskilling) மற்றும் உயர்திறன் (Upskilling) பயிற்சிகள் மூலம் சுமார் 90,000 நபர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனது 100 நாள் பதவிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் திட்டங்கள் அனைத்தும், நாட்டின் முதன்மை நோக்கமாகத் தொழிலாளர்களின் நலனை முன்னிறுத்துவதில் அரசாங்கம் கொண்டுள்ள தீவிர அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கின்றன என்று டத்தோஶ்ரீ ரமணன் மேலும் வலியுறுத்தினார்.

spot_img

latest articles

explore more