கோலாலம்பூர், பிப். 10-
நாட்டிலுள்ள மக்களின் நன்மைக்காக அரசாங்கம் மேற்க்கொள்ளும் எந்தவொரு நல்ல திட்டங்கள் குறித்தும் எதிர்கட்சிகள் மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்தி வருவதாக பிரதமர்துறை துணையமைச்சர் செனட்டர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி தெரிவித்தார்.
போலியான செய்திகள் பரவுவதைக் களைய புதிய சட்டத்தை கொண்டுவரும் அரசாங்கத்தின் முயற்சி குறித்து எதிர்கட்சிகள் பல்வேறு வகையான குற்றச்சாட்டுகளையும் அவதூறுகளையும் பரப்பி வருவதன் வாயிலாக இது தெளிவாக தெரிவதாக ம.இ.கா.வின் தேசிய துணைத்தலைவருமான அவர் கூறினார்.
தொழில்நுட்பம் மற்றும் இணைய உலகில் போலியான செய்திகளும் வதந்திகளும் சமூகவலைத்தளங்களில் மிக அதிகமாக பகிரப்படுவதால் அதனை களையும் வகையிலும் அதனை மீண்டும் சீரமைக்கவும் அரசாங்கம் இத்தகைய புதிய மாற்றத்தை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
பெயரிலேயே அவர்கள் எதிர்கட்சியாக இருப்பதால் அவர்களின் கடமையே எதிர்ப்பதுதான். எதிர்கட்சிகள் மக்களை பற்றியோ அவர்களது தேவைகளைப் பற்றியோ கவலைப்படவில்லை. மாறாக, வரும் பொதுத்தேர்தலில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு சுயநலமாக இருக்கின்றனர். தேசிய முன்னணியில் நாங்கள் மக்களுக்கு முதன்மை அளிக்கின்றோம். இந்த சூழ்நிலையில் இதுப்போன்ற அரசாங்கத்தின் நடவடிக்கை சரியானதாக உள்ளது. குறிப்பாக, சமூகவலைத்தளங்களில் பரவும் போலியான செய்திகள் நாட்டின் அமைதிக்கும் சுபிட்சத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளதால் அதனைக் களைவதற்கு இந்த நடவடிக்கை மிக முக்கியமானதாக உள்ளது.
இக்காலத்தில் நம் நாடு மட்டுமின்றி உலக முழுவதிலும் செய்திகளை பரப்புவது அரசியல் கலாச்சாரமாக மாறிவிட்டது. மக்களிடையே எதிர்மறையான சிந்தனைகளை விதைக்கக்கூடிய அவதூறுகள் மற்றும் தேச நிந்தனைகள் பரவலாக பரப்பப்படுகின்றன. போலியான செய்திகளைக் கட்டுப்படுத்துவது எதிர்க்கட்சிகள் கூறுவது போல் உண்மையை மறைப்பது அல்ல.
இது போன்ற சட்டம் இருந்தால் இதுநாள் வரையில் அவர்கள் கூறி வந்த பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என அஞ்சுகின்றனர். அவர்கள் கூறுவதை மக்கள் நம்ப வேண்டாம் என தாம் கேட்டுக்கொள்வதாக சாலை பாதுகாப்பு மார்ஷல் கிளப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றை தொடக்கி வைத்து உரையாற்றிய போது டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி கூறினார்.
போலியான செய்திகள் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டத்தை இயற்றுவதை தாமதப்படுத்தினால் நாட்டின் பாதுகாப்பு சூதாட்டமாக்கப்பட்டுவிடும். இப்போது மிக அதிகமான செய்திகள் பரப்படுகின்றன. நாட்டின் அமைதி மற்றும் ஒற்றுமையைப் பாதுகாக்க இத்தகைய போலியான செய்திகள் பரப்படுவதைத் தடுக்க வேண்டும். தவறு செய்யவில்லை என்றால் இந்த சட்டத்திற்கு ஏன் பயப்பட வேண்டும்?
இந்த சட்டம் அரசியல் தேவைக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என கூறப்படுவது அறிவுக்கு பொருந்தாதது ஆகும். மாறாக, மக்களிடையே அது குழப்பத்தையே ஏற்படுத்தும். அரசாங்கம் கொண்டு வரும் இந்த திட்டம் நன்மையளிக்கும் என தெரிந்தும் அது குறித்து பொய்யான குற்றச்சாட்டுகளைப் பல்வேறு வகைகளில் பரப்பும் கலாச்சாரத்தை எதிர்க்கட்சிகள் நிறுத்திக்கொள்ள வேண்டுமென டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி கேட்டுக்கொண்டார்.


